பதிவு செய்த நாள்
24
மார்
2023
09:03
கிருஷ்ணகிரி: சிந்தகம்பள்ளி யுகாதி திருவிழாவில், பக்தர்கள் மீது நடந்து பூசாரி ஆசி வழங்கினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சிந்தகம்பள்ளி கிராமத்தில், தெலுங்கு வருட பிறப்பான யுகாதி பண்டியை முன்னிட்டு கடந்த, 22ல் ஊரில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு வேப்பம் பத்திரி, வெல்லம் வைக்கும் நிகழ்ச்சியும், அன்றிரவு தீச்சட்டி எடுக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று அதிகாலை முத்துமாரியம்மன் சுவாமி கரகம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. அலங்கரிக்கப்பட்ட கரகத்தை கோவில் பூசாரி எடுத்து ஊர்வலமாக சென்றார். அப்போது, ஒவ்வொரு வீட்டின் முன்பும் கரகத்திற்கு சிறப்பு பூஜை செய்ததுடன், ஆடுகளை பலியிட்டு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர், அண்ணா நகரிலுள்ள காளிக்கோவில் அருகிலிருந்து முத்துமாரியம்மன் கோவில் வரை, சாலையில் ஈரத்துணியுடன் பக்தர்கள் குப்புற படுத்துக் கொண்டனர். அவர்கள் மீது கரகம் எடுத்து வந்த பூசாரி நடந்து சென்று ஆசி வழங்கினார். பின்னர் கோவில் முன்பு தீ குண்டத்தில் கரகத்துடன் பூசாரி இறங்கியவுடன், அவரை தொடர்ந்து பக்தர்கள் இறங்கினர். விழாவில், 500க்கும் மேற்பட்ட ஆடு, கோழிகளை பலியிட்டு, சமைத்து உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு விருந்தளித்தனர். இதில், கிருஷ்ணகிரி, வேலுார் மாவட்டங்களில் இருந்தும், ஆந்திராவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இளைஞர்கள் ஒருவருக்கொருவர் வண்ணப்பொடிகளை பூசி மகிழ்ந்தனர்.