பதிவு செய்த நாள்
29
மார்
2023
09:03
தஞ்சாவூர்: 108 வைணவத் தலங்களில் ஒன்றானதும், பிரசித்தி பெற்ற கல்கருட ஸ்தலமாகவும் போற்றப்படும் கும்பகோணம் அருகேயுள்ள நாச்சியார்கோயில், வஞ்சுளவள்ளி தாயார் சமேத சீனிவாசப்பெருமாள் திருக்கோவிலில் பங்குனி பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
108 வைணவ தலங்களில், ஒன்றான கும்பகோணம் அருகேயுள்ள நாச்சியார்கோயில் வஞ்சுளவள்ளி தாயார் சமேத சீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில் ஆண்டு தோறும் பங்குனி பெருந்திருவிழா 11 நாட்களுக்கு சிறப்பாக நடைபெறுவது வழக்கம், அதுபோலவே இவ்வாண்டும் இவ்விழா இன்று, உற்சவர் பெருமாள் தாயாருடன் கொடிமரம் அருகே எழுந்தருள பட்டாச்சாரியார்கள் வேதமந்திரம் ஒலிக்க, நாதஸ்வர மேள தாள வாத்தியங்கள் முழங்க, கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து, கருட சின்னம் வரையப்பட்ட கொடி ஏற்றி வைக்கப்பட்டு கொடிமரத்திற்கும், பெருமாள் மற்றும் தாயாருக்கும் அலங்கார தீபாராதனை செய்யப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கோவிலில் கும்பாபிஷேக திருப்பணிக்காக பாலாலயம் செய்யப்பட்டுள்ளதால், கொடியேற்றத்தை தொடர்ந்து, இன்று முதல் நாள் தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதியுலாவிற்கு பதிலாக பிரகார உலாவாக நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக நான்காம் நாளான வரும் ஏப்ரல் 01ம் தேதி சனிக்கிழமை மாலை பிரசித்தி பெற்ற கல்கருட சேவையும், தொடர்ந்து 09ம் நாளான 06ம் தேதி உற்சவர் பெருமாள் தாயார் கோ ரதத்தில் பிரகார உலா நடைபெறுகிறது.பின்னர், 11ம் நாளான 08ம் தேதி விடையாற்றியுடன் விழா நிறைவு பெறுகிறது.