பதிவு செய்த நாள்
29
மார்
2023
11:03
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயில் பங்குனி திருவிழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது. இக்கோயிலில் உள்ள கொடி மரத்தில் நேற்று காலை 11:00 மணிக்கு சிங்க கொடி ஏற்றி வைக்கப்பட்டது. தொடர்ந்து அபிஷேகம் நடந்து, தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டன.
இரவு 7:00 மணிக்கு அம்மன் பூதகி வாகனத்தில், கரகாட்டம், ஒயிலாட்டம் மற்றும் பள்ளி மாணவர்களின் அலங்கார அணிவகுப்புகளுக்கு மத்தியில் வீதி வலம் வந்தார். தினமும் வெள்ளி சிம்மம், அன்ன, ரிஷப, யானை, சிங்க, கிளி, காமதேனு, குதிரை வாகனத்தில் வலம் வருவார். மார்ச் 31 காலை அம்மன் காளி அலங்காரம், மாலை 6:00 மணிக்கு இரண்டு மாடுகள் பூட்டிய வண்டியில் வண்டி மாகாளி வேஷம் நடக்க உள்ளது. ஏப்., 5 காலை தொடங்கி மாலை வரை அக்னி சட்டி ஊர்வலம் மற்றும் இரவு 8:10 மணிக்கு அம்மன் சர்வ அலங்காரத்துடன் மின் அலங்கார தேரில் நான்கு ரத வீதிகளில் வலம் வர உள்ளார். மறுநாள் அதிகாலை 5:00 மணிக்கு கள்ளர் திருக்கோலத்துடன் வைகை ஆற்றில் எழுந்தருளுவார். அன்று இரவு தீர்த்த வாரி உற்சவம் நடைபெறும். ஏப்., 7 அதிகாலை 4:00 மணி தொடங்கி 10:00 மணி வரை வைகை ஆற்றில் இருந்து நூற்றுக்கணக்கான பால் குடங்களை சுமந்து நேர்த்திக் கடன் செலுத்த உள்ளனர். அன்று காலை 11:00 மணிக்கு அபிஷேக, ஆராதனைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை மீனாட்சி சுந்தரேஸ்வரர், முத்தாலம்மன் கோயில் தேவஸ்தான டிரஷ்டிகள் மற்றும் ஆயிர வைசிய சபை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.