ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அடுத்த, நாகலாபுரம் கிராமத்தில் உள்ளது வேதநாராயணசுவாமி கோவில். பழமை வாய்ந்த இக்கோவில், திருமலை - திருப்பதி தேவஸ்தான கட்டுப்பாட்டில் உள்ளது.
இங்கு மூலவர் உடலின் மேல் பாதி மனித வடிவிலும், கீழ் பாதி மீன் வடிவிலும் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் சூரிய பூஜை விழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு கடந்த 24ம் தேதி இவ்விழா துவங்கியது. முதல் இரண்டு நாட்கள் மூலவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. மூன்றாம் நாளான, 25ம் தேதி மாலை சூரிய கதிர்கள் கோபுரத்தில் இருந்து, 630 அடி துாரத்தில் உள்ள மூலவரின் பாதத்தில் விழுந்தது. அன்று இரவு கோவிலின் எதிரில் உள்ள குளத்தில், உற்சவர் சீதா - ராமச்சந்திர சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அடுத்த இரு தினங்கள் வயிற்றிலும், நெற்றியிலும் சூரிய கதிர்கள் விழுந்தன. இரு நாட்களுக்கும் குளத்தில் உற்சவர் வேதவல்லி சமேத வேதநாராயண சுவாமி தெப்பத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.