பதிவு செய்த நாள்
29
மார்
2023
11:03
தஞ்சாவூர், தஞ்சை மாவட்டம் திருவையாறு அந்தணர்குறிச்சியில் நந்தியம்பெருமான் பிறப்பு விழா இன்று நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அந்தணர்குறிச்சியில், பழமை வாய்ந்த புரான காலத்தில் இருந்து தொன்றுதொட்டு நந்தியம் பெருமான் பிறப்பு விழா ஆண்டுதோறும் வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று காலை, வேதங்களுடன், மேளதாளம் முழங்க, பெருமான் பிறப்பு ஏர்கலப்பையைகொண்டு பெட்டியை மண்ணோடு சேர்த்து இழுக்கப்படும் நிகழ்வு நடந்தது. பின்னர், நந்தியம்பெருமானுக்கு சந்தனம், மஞ்சள், தயிர், தேன், பால், இளநீர் போன்ற திரவியங்களைகொண்டு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைப்பெற்றது. விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, இன்று மாலை ஐயாறப்பர் கோவில், நந்தியம்பெருமானுக்கு பட்டாபிஷேகம் நடைபெறும்.
பின்னர், நாளை(30ம் தேதி) காலை 5.30 மணிக்கு ஐயாறப்பர், அறம்வளர்த்தநாயகியுடன் கண்ணாடி பல்லாக்கிலும், நந்தியம்பெருமான் பட்டுவேட்டி, பட்டுசட்டை அணிந்து மாப்பிள்ளை கோலத்தில் குதிரை வாகணத்தில் புறபட்டு, தில்லைஸ்தானம், கடுவெளி, வைத்தியநாதன்பேட்டை வழியாக கொள்ளிடம் ஆற்றில் இறங்கி அரியலுார் மாவட்டம் திருமழாபாடிக்கு செல்லும் நிகழ்வு நடைபெறுகிறது. இதையடுத்து திருமழாப்பாடியில் இரவு வைத்தியநாதன் சுவாமி கோவிலில் நந்தியம் பெருமானுக்கும் சுயசாம்பிகைக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. நந்திபார்த்தால் முந்திகல்யாணம் என்று சொல்வார்கள். இதனால், ஆயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளுவார்கள். பின்னர், சுவாமி அங்கிருந்து புறப்பட்டு திருவையாறு வந்தடையும். விழா ஏற்பாடுகளை தருமபுரஆதினம் 27வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் உத்தரவின்பேரில், தருமபுர ஆதின கட்டளை ஸ்ரீமத் சட்டநாத தம்பிரான் சுவாமிகள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.