பதிவு செய்த நாள்
31
மார்
2023
11:03
பொள்ளாச்சி; பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில் ராமநவமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பொள்ளாச்சி சத்திரம்வீதி சீதாராம ஆஞ்சநேய சுவாமி கோவில் மற்றும் ஸ்ரீராகவேந்திர சுவாமி மிருத்திகா பிருந்தாவனத்தில், ராம நவமி ரதோற்சவ விழா கடந்த, 22ம் தேதி துவங்கியது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. நேற்று ராமநவமியை முன்னிட்டு, தேர்த்திருவிழா நடந்தது. சீதாராமர் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள், கோலாட்டம் ஆடியபடி தேர் முன் சென்றனர். ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவிலில், ராமநவமி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஒன்பது வகையான அபிேஷக, அலங்கார பூஜைகள் மற்றும் ஒன்பது வகையான மலர்களால் அலங்கார பூஜைகளும் நடைபெற்றன. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். திப்பம்பட்டி சிவசக்தி கோவிலில் ராமபிரான், சீதாதேவிக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அம்பராம்பாளையம் குளத்துார் கோதண்டராமர் கோவில், டி. கோட்டாம்பட்டி கோதண்டராமர் கோவில் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில் ராமநவமி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
திருக்கல்யாணம்: உடுமலை, தில்லைநகர் ஆனந்த சாய் கோவிலில் ராமநவமி விழா, கடந்த 26ம் தேதி முதல் கொண்டாடப்படுகிறது. ஆனந்த சாய் அறக்கட்டளையின் சார்பில் சிறப்பு அபிேஷக அலங்கார பூஜை, நிகழ்ச்சிகள் நடக்கிறது. கணபதி ேஹாமத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து ராமநாம சங்கீர்த்தனம், விஷ்ணுசகஸ்ரநாம பாராயணம், சாய்சத்சரிதம் பாராயணமும் நடந்தது. நேற்று ருத்ரப்ப நகர், ஜி.டி.வி. திருமண மண்டபத்தில் சீதாராமர் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் பட்டு உடுத்தி சுவாமிகள் திருமண கோலத்தில் காட்சியளித்தனர். மந்திரங்கள் முழங்க, ஆன்மிக முறைப்படி சீதாராம திருக்கல்யாண வைபவம் அரங்கேறியது. பக்தர்கள் ராமநாம கோஷமிட்டு, வழிபட்டனர். மாலையில் சிறப்பு பூ அலங்கார திருத்தேரில், தம்பதி சமேதராக சீதாராமர் சுவாமிகளின் திருவீதி உலா நடந்தது.