பதிவு செய்த நாள்
01
ஏப்
2023
01:04
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் தமிழக கவர்னர் ரவி தனது மனைவியுடன் சுவாமி தரிசனம் செய்தார்.
இன்று காலை 8:28 மணிக்கு கோயிலுக்கு வந்த கவர்னர் மற்றும் அவரது மனைவியை, ஆடிப்பூர பந்தலில் வைத்து தக்கார் ரவிச்சந்திரன், அறநிலைத்துறை உதவி ஆணையர் வளர்மதி, செயல் அலுவலர் முத்துராஜா, கோயில் பட்டர்கள் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். மணவாள மாமுனி சன்னதியில் தரிசனம் செய்து சடகோப ராமானுஜர் சுவாமிகளிடம் ஆசிர்வாதம் பெற்றனர். பின்னர் ஆண்டாள் கோயிலில் கொடிமரம், லஷ்மி நரசிம்மர் சன்னதி, மூலஸ்தானம் தரிசனம் செய்து உட்பிரகாரம் சுற்றி வந்து தங்க விமானம், கண்ணாடி மண்டபத்தில் எழுந்தருளிய உற்சவர் ஆண்டாள், ரெங்கமன்னாரை தரிசனம் செய்தனர். கோயில் நிர்வாகத்தின் சார்பில் சிறிய ஆண்டாள் சிலை மற்றும் கோபுர நினைவு பரிசினை தக்கார் ரவிச்சந்திரன், அறநிலையத்துறை அதிகாரிகள், கோயில் பக்தர்கள் வழங்கினர். அங்கு வழங்கப்பட்ட கோயில் பிரசாதத்தை இருவரும் சாப்பிட்டனர். பின்னர் ஆண்டாள் நந்தவனத்தில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, தமிழக அரசின் முத்திரை சின்னமான ராஜகோபரத்தை பார்வையிட்டு வணங்கி, போட்டோ எடுத்துக் கொண்டனர். கவர்னரின் வருகை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.