பதிவு செய்த நாள்
20
செப்
2012
11:09
சேலம்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சேலத்தில், இந்து முன்னணி நிர்வாகிகள், மாலை அணிந்து விரதத்தை துவக்கினர்.விநாயகர் சதுர்த்தியையொட்டி, இந்து முன்னணி சார்பில், சேலம் எல்லைப்பிடாரி அம்மன் கோவில் அருகில், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து, சேலம் மாவட்ட இந்து முன்னணி தலைவர் சந்தோஸ்குமார் தலைமையில், ராஜேஸ், அண்ணாதுரை, சீனிவாசன், சிவா, மற்றொரு சீனிவாசன் ஆகியோர் மாலை அணிந்து கொண்டனர். நிகழ்ச்சியில், பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.சேலத்தில் முதல் முறையாக, விநாயகர் சதுர்த்திக்கு, இந்து முன்னணியினர் மாலை அணிந்து, மூன்று நாட்கள் விரதம் இருக்கின்றனர். மூன்று நாள் வழிபாட்டுக்கு பின், விநாயகர் சிலைகள் ஊர்வலத்துடன் சென்று, விசர்ஜனம் செய்யும் இடத்தில், மாலையை கழற்றி விரதத்தை நிறைவு செய்ய உள்ளனர்.