பதிவு செய்த நாள்
20
செப்
2012
11:09
பேரூர் வட்டார பகுதியில், 107 விநாயகர் சிலைகள் நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டன.
விநாயகர் சதுர்த்தியையொட்டி, பேரூர் வட்டாரப் பகுதிகளில், விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யவுள்ள இடங்களில், நேற்று காலை, சிறப்புஹோமங்கள், நவகோள்வேள்வி, பூர்ணாகுதி வழிபாடுகள் நடத்தப்பட்டு, விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
காலை, மாலை சிறப்பு தீபாராதனை வழிபாடுகள் நடத்தப்பட்டு, நாளை விசர்ஜன ஊர்வலம் நடத்தப்பட்டு, ஆங்காங்கே உள்ள குளங்களில் பிரதிஷ்டைசெய்யப்பட்ட சிலைகள், ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு விசர்ஜன நிகழ்ச்சி நடக்கின்றன.
பேரூர்: பேரூர் போலீஸ் எல்லைக்குக்குட்பட்ட பேரூர்செட்டிபாளையம், பேரூர், ஆறுமுககவுண்டனூர், பச்சாபாளையம், தீத்திபாளையம், சென்னனூர், மாதம்பட்டி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில், 32 விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பேரூர் பெரியகுளம் பகுதியில் சிலைகள் விசர்ஜனம் செய்யப்படுகின்றன.
வடவள்ளி: மருதமலை, கல்வீரம்பாளையம், சோமையம்பாளையம், வீரகேரளம், லிங்கனூர், வேடபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மொத்தம் 15 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இப்பகுதி சிலைகள், வேடபட்டி நாகராசபுரம் குளத்தில் விசர்ஜனம் செய்யப்படுகின்றன.
தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூர், தேவராயபுரம், கலிக்கநாய்க்கன் பாளையம், தெனமநல்லூர் உள்பட பல்வேறு பகுதிகளில் 15 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
ஆலாந்துறை: ஆலாந்துறை வட்டாரத்தில், வடிவேலாம்பாளையம், மோளபாளையம், நாதேகவுண்டன்புதூர், ராமநாதபுரம் உள்பட பல்வேறு கிராமங்களில் 32 விநாயகர் சிலையும், காருண்யாபகுதியில் 14 சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. தொண்டாமுத்தூர், ஆலாந்துறை, காருண்யா வட்டாரத்திலுள்ள சிலைகள், நாளை ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, சாடிவயல் சின்னாறு, தொண்டாமுத்தூர் வட்டார குளங்களில் விசர்ஜனம் செய்யப்படுகின்றன.
அன்னூர்: 66 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது.
ஓதிமலை ரோட்டில் உள்ள, பாத விநாயகர் கோவிலில், இந்து முன்னணி சார்பில், 12 அடி உயர விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கணபதி ஹோமம் செய்யப்பட்டது. இந்து முன்னணி ஒன்றிய தலைவர் பிரதீப் தலைமை வகித்தார். ஒன்றிய பொதுச்செயலாளர் குட்டி, நகரச் செயலாளர்கள் ராமமூர்த்தி, குமார் உள்பட பலர் பங்கேற்றனர். இந்து முன்னணி சார்பில், அன்னூர் நகரில் எட்டு இடங்களிலும், மூக்கனூர், கரியாக்கவுண்டனூர், ஆலாங்குட்டை உள்பட 46 இடங்களில், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சதுர்த்தி விழா நடந்தது. 21ம் தேதி மாலை, அன்னூரில் முக்கிய வீதிகள் வழியாக விசர்ஜன ஊர்வலம் நடக்கிறது. இரவு ஆலாங்கொம்பு அருகே பவானி ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகின்றன.
விஸ்வ இந்து பரிஷத் சார்பில், அன்னூர் நகர் உள்பட 20 இடங்களில், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது.
பரிஷத் ஒன்றிய தலைவர் சிவராஜ், நிர்வாகிகள் தங்கவேல், ரத்தினசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.
மேட்டுப்பாளையம்: விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு, மேட்டுப்பாளையம், காரமடை மற்றும் சிறுமுகை பகுதிகளில், இந்து முன்னணி சார்பில் 177 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு, இந்து அமைப்புகள் சார்பில், நேற்று விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன; நாளை விசர்ஜன ஊர்வலம் நடக்கிறது.
மேட்டுப்பாளையம், சிவன் புரத்தில் உள்ள ராஜ அஷ்ட விமோசன மகா கணபதி கோவிலில், நேற்று காலை 6.00 மணிக்கு, கணபதி பூஜை, ஹோமமும், 108 சங்கு ஆவாஹனமும், மகா தீபாராதனையும் நடந்தது.
பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள சக்தி விநாயகர் கோவில், சுப்ரமணிய சுவாமி கோவில், காட்டூர் வலம்புரி விநாயகர் கோவில், கோ ஆப்ரேட்டிவ் காலனியில் உள்ள சக்தி விநாயகர் கோவில், ஹவுசிங் யூனிட்டில் உள்ள ராஜகணபதி கோவில்களில் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு, நேற்று காலை சிறப்பு வழிபாடு நடந்தது. சுவாமிக்கு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. காரமடை தெற்கு ரத வீதியில் உள்ள சித்தி விநாயகர் கோவில், மத்தம்பாளையத்தில் உள்ள காரை விநாயகர் கோவில் உள்ளிட்ட விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
காரமடை பிளேக் மாரியம்மன் கோவில் அருகில் உள்ள ராஜகணபதி கோவிலில், சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. இதற்காக நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர்.
மேட்டுப்பாளையம் இந்து முன்னணி சார்பில், மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள சக்தி விநாயகர் கோவில், மகாதேவபுரம், காட்டூர், பங்களா மேடு, ஓடந்துறை, சந்தை திடல் உள்ளிட்ட 49 இடங்களில், நேற்று காலை கணபதி ஹோமம், சிறப்பு பூஜையுடன் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இத்துடன், பொதுமக்கள் மற்றும் கோவில் சார்பில், ஐந்து இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
காரமடை இந்து முன்னணி சார்பில், காரமடை, ஆசிரியர் குடியிருப்பு, காந்தி மைதானம் உள்ளிட்ட 90 இடங்களில், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
சிறுமுகை இந்து முன்னணி சார்பில், சிறுமுகை, பழத்தோட்டம், தியேட்டர் மேடு, பெத்திக்குட்டை, இரும்பறை, சின்னகள்ளிப்பட்டி உள்ளிட்ட 38 இடங்களில், நேற்று காலை கணபதி ஹோமம், சிறப்பு பூஜையுடன் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
போத்தனூர்: கோவையில், போத்தனூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், இந்து முன்னணி 36, அனுமன் சேனா 15, சிவசேனா மற்றும் பாரத் சேனா சார்பில் தலா ஒன்று, விஸ்வ இந்து பரிஷத் மற்றும் இந்து மக்கள் கட்சி (தமிழகம்) சார்பில் தலா இரண்டு மற்றும் பொதுமக்கள் சார்பில் நான்கு சிலைகளும், பிரதிஷ்டை செய்யப்பட்டன.
குனியமுத்தூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், இந்து முன்னணி 12, இந்து மக்கள் கட்சி 10, அனுமன் சேனா மற்றும் பொதுமக்கள் சார்பில் 12 சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டன. மதுக்கரை சுற்றுப் பகுதிகளில் 26, க.க.சாவடி சுற்றுப் பகுதிகளில் 18, பேரூரில் 28, தொண்டாமுத்தூரில் 15, வடவள்ளியில் 15, ஆலாந்துறையில் 30, காருண்யா நகரில் 14, சூலூரில் 55, கிணத்துகடவில் 22 மற்றும் செட்டிபாளையத்தில் 11 ஆக மொத்தம், 229 சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டன. அனைத்துப் பகுதிகளிலும், அதிகாலை கணபதி ஹோமத்துடன் பிரதிஷ்டை விழா நடந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் மற்றும் சொற்பொழிவு உள்ளிட்டவை நடந்தன. ஒரு சிலைகளுக்கு இரண்டு போலீசார் வீதம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நாளை, சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, குறிச்சி குளம், வாளையார் டேம் உள்ளிட்ட பகுதிகளில் விசர்ஜனம் செய்யப்படுகின்றன.
திருப்பூர் :விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, திருப்பூரில் 500 இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, திருப்பூரில், இந்து அமைப்புகள் சார்பில், பல்வேறு இடங்களில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இந்து முன்னணி சார்பில், 400 இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள் ளன. கொங்கு மெயின் ரோட்டில், 108 சிலைகள், கோட்டை மாரியம்மன் கோவில், குமரன் சிலை அருகில் 11 அடி; காந்தி நகர், அருவங்காடு பகுதிகளில் ஒன்பது அடி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
விழாவை முன்னிட்டு, விளையாட்டு போட்டிகள், கோலப்போட்டி, ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. புதிய பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் அன்னதானம் நடந்தது. முத்தணம்பாளையம் கிருஷ்ணா நகர், பாலாஜி நகர், சேரன் காலனி கிளை சார்பில், ரத்த தான முகாம் நடந்தது. இந்து முன்னணியினர் 40 யூனிட் ரத்தம் தானமாக வழங்கினர்.
இந்து அன்னையர் முன்னணி சார்பில், 108 கலச ஊர்வலம் இன்று நடக்கிறது. முளைப்பாரி, கும்மிப்பாட்டு, தீபஜோதி, கரகம் எடுத்து வரும் பெண்கள், ஈஸ்வரன் கோவிலில் துவங்கி, மாரியம்மன் கோவில் வரை வருகின்றனர்.
மூன்று நாட்கள் சிறப்பு வழிபாடு, நிகழ்ச்சிகளை தொடர்ந்து, நாளை (21ம் தேதி) மாலை 4.00 மணிக்கு, விசர்ஜன ஊர்வலம் நடக்கிறது. தெற்கு பகுதி ஊர்வலம், அரசு மருத்துவமனை அருகிலும், மத்திய பகுதி ஊர்வலம், மங்கலம் ரோடு செல்லம் நகர் விரிவு பகுதியில் இருந்தும், வடக்கு பகுதி ஊர்வலம் புதிய பஸ் ஸ்டாண்டிலும் துவங்கி, ஆலங்காடு வருகிறது. நிறைவு விழா பொதுக்கூட்டத்தை தொடர்ந்து, தாராபுரம் ரோடு பி.ஏ.பி., வாய்க்காலில் சிலைகள் விசர்ஜனம் செய்யப்படுகின்றன.
விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் சார்பில், 22 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. சித்தி விநாயகர் கோவில் முன் 13 அடி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, ஐந்து நாள் சிறப்பு பூஜைகள், பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. வரும் 23ல், அன்னதானம் மற்றும் விசர்ஜன ஊர்வலம் நடக்கிறது.
பாரத்சேனா சார்பில், 21 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மார்க்கெட், பல்லடம் ரோட்டில் 13 அடி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன; விசர்ஜன ஊர்வலம் 22ல் நடக்கிறது. சிவசேனா சார்பில், 21 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன; 16 அடி சிலை, நெசவாளர் காலனி பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன; 23ல் விசர்ஜன ஊர்வலம் நடக்கிறது. இதேபோல், பாரத்சேனா, பாரத அன்னையர் பேரவை சார்பிலும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
அவிநாசி: அவிநாசி ஒன்றிய, நகர இந்து முன்னணி சார்பில், 35 சிலைகள், சேவூரில் 15, பெருமாநல்லூரில் 30, திருமுருகன்பூண்டியில் ஏழு என மொத்தம் 80 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. விசர்ஜன ஊர் வலம் வரும் 22ம் தேதி மாலை 5.00 மணிக்கு நடக்கிறது. சேவூர் ரோடு, வ.உ.சி., திடலில் துவங்கும் ஊர்வலம், அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் நிறைவடைகிறது. லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்றில் விசர்ஜனம் செய்யப்படுகின்றன.
திருமுருகன்பூண்டியில் இந்து மக்கள் கட்சி அனுமன்சேனா சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அவிநாசி விவேகானந்தர் பேரவை சார்பில், வெள்ளியம்பாளையம், செம்பியநல்லூர், ஆட்டையாம்பாளையம் பகுதியில் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
பல்லடம்: பல்லடத்தில் இந்து முன்னணி சார்பில், 31 சிலைகள், இ.ம.க., சார்பில், 17 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மூன்றரை அடி முதல் ஒன்பதரை அடி வரை சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. பல்லடம் கிழக்கு பகுதியில் இந்து முன்னணி சார்பாக 31 சிலைகள், மேற்கு பகுதியில் 20 சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இ.ம.க.,வினர் ஒன்றிய பகுதியில் 15 சிலைகள் வைத்துள்ளனர்.
இந்து முன்னணியினர் மேற்கு பகுதியில் வைத்துள்ள சிலைகள், இன்று மாலை பொங்கலூர் பி.ஏ.பி., வாய்க்காலில் விசர்ஜனம் செய்யப்படுகின்றன. கிழக்கு பகுதியில் உள்ள சிலைகள், ஆண்டிபாளையம் பி.ஏ.பி., வாய்க்காலில் நாளை விசர்ஜனம் செய்யப்படுகின்றன. இ.ம.க.,வினர் சிலைகள், நாளை மறுநாள் பொங்கலூர் பி.ஏ.பி., வாய்க்காலில் விசர்ஜனம் செய்யப்படுகின்றன.
டி.ஐ.ஜி., ஆய்வு: பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகர் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஊர்வல பாதைகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேற்கு மண்டல ஐ.ஜி., சுந்தரமூர்த்தி நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். நேற்று, டி.ஐ.ஜி., சுமித் சரண், ஊர்வலம் செல்லும் வழித்தடங்களை நேரில் ஆய்வு செய்தார். பின், எஸ்.பி., அமித்குமார் சிங் மற்றும் போலீசாருடன் ஆலோசனை நடத்தினார்.
திருவள்ளூர் :விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும், 754 சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன.
திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி ஆகிய, ஐந்து உட்கோட்டங்களில், மொத்தம் 754 சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன. ஒரு அடி முதல், ஆறு அடி வரை சிலைகள் உள்ளன.
சிலைகளுக்கு அந்தந்த பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் தலைமையில் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பூஜை நடத்துபவர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் போன்றவர்களின் பெயர், முகவரி, தொலைபேசி ஆகியவற்றை போலீசார் பெற்று உள்ளதால், பிரச்னைகள் ஏற்படாதவாறு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சிலைகள், மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட, 16 இடங்களில், வரும் 23 மற்றும், 25ம் தேதிகளில் கரைக்கப்பட உள்ளன.
மாவட்டத்தில் ஒவ்வொரு காவல் உட்கோட்டிற்கும் இரண்டு காவலர்கள் நியமிக்கப்பட்டு விநாயகர் சீலைகளை மெட்டல் டிடக்டர் மூலம் கண்காணித்து வருகின்றனர்.
புதுக்கோட்டை: விநாயகர் சதுர்த்தியையொட்டி, அதிகாலை மு தலே கோவில்களில் விநாயகர் சிலைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை போன்ற வழிபாடுகள் நடந்தது. புதுக்கோட்டை டவுன் உட்பட மாவட்டம் முழுவதும், 175 விநாயகர் சி லைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
விநாயகர் சதுர்த்தி விழா, நேற்று நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் வழக்கம்போல், நேற்றும் இந்து முன்னணி, விநாயகர் பேரவை உள்ளிட்ட ஆன்மீக அமைப்புகளின் சார்பில், விநாயகர் சதுர்த்தி விழா பக்தி பரவசத்துடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.பிரசித்தி பெற்ற புதுக்கோட்டை புவனேஸ்வரி அம்மன் கோவில் பஞ்சமுக விநாயகருக்கு விபூதி, களபம், சந்தனம், பால், பன்னீர், பஞ்சாமிர்தம், இளநீர் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.
புதிய பஸ்ஸ்டாண்டில் அமர்ந்து அருள்பாலித்துவரும் சங்கீத மங்கள விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை போன்ற வழிபாடுகள் நடந்தது. இதுபோன்று சாந்தநாத ஸ்வாமி திருக்கோவில், அரியநாச்சியம்மன் திருக்கோவில், பிரகதாம்பாள் உடனுறை கோகர்ணேஸ்வரர் திருக்கோவில், தண்டாயுதபாணி திருக்கோவில், திருவப்பூர் முத்துமாரியம்மன் திருக்கோவில், திருவேங்கைவாசல் வியாகபுரீஸ்வரர் திருக்கோவில் உள்ளிட்ட முக்கிய திருக்கோவில்களில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று அதிகாலை முதலே கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், வாஸ்த்த சாந்தி, அங்குரார்ப்பணம் போன்ற சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று விநாயகரை வழிபட்டனர்.இந்து முன்னணி உள்ளிட்ட ஆன்மீக அமைப்புகளின் சார்பில், புதுக்கோட்டை நகரம் உட்பட மாவட்டம் முழுவதும், 175 இடங்களில், மூன்று அடி முதல், 12 அடி உயரம் கொண்ட விதவிதமான விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. புதுக்கோட்டை நகரில் புதிய பஸ்ஸ்டாண்ட், பழைய பஸ்ஸ்டாண்ட், திலகர்திடல், திருக்கோகர்ணம், திருவப்பூர், பிருந்தாவனம், மச்சுவாடி, பாலன்நகர், போஸ்நகர், காமராஜபுரம், கணேஷ்நகர், தெற்கு, 3 மற்றும், 4ம் வீதிகள், மேல, 3ம் வீதி உட்பட, 42 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது.இதேபோன்று திருமயம், பொன்னமராவதி, திருவரங்குளம், ஆலங்குடி, அறந்தாங்கி, மணமேல்குடி, ஆவுடையார்கோவில், கோனாப்பட்டு, மதியநல்லூர் உள்ளிட்ட பல பகுதிகளில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
புதுக்கோட்டையில் நாளை விநாயகர் சிலைகள் விஸர்ஜன ஊர்வலம் நடக்கிறது. இதற்காக நகரின் பல ப குதிகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் திலகர்திடல் பகுதி க்கு ஊர்வலமாக எடுத்துவரப்படுகிறது. இங்கு விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்தபின் மாலை, 5 மணிக்கு மேளதாளம் முழங்க விஸர்ஜன ஊர்வலம் துவங்குகிறது.மேல ராஜவீதி, வடக்கு ராஜவீதி, தெற்கு, 4ம் வீதி, சின்ன ப்பா பூங்கா உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக, இர வு, 8 மணிக்கு ஊர்வலம் புதுக்குளத்தை அடைகிறது. அங்கு நடக்கும் சிறப்பு பூஜைகளுக்கு பின், ஒவ்வொரு சிலைகளும் குளத்துக்குள் எடுத்து செல்லப்பட்டு விசர்ஜனம் செய்யப்படுகிறது.