கப்பலூர் முத்தாலம்மன் கோவிலில் குழிமாற்று திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஏப் 2023 01:04
திருமங்கலம்: திருமங்கலம் அருகே கப்பலூரில் 400 ஆண்டு பழமையான முத்தாலம்மன் கோவில் உள்ளது. நாயக்க மன்னர் காலத்தில் இருந்து புதைகுழி திருவிழா நடந்தது. நேர்த்திக் கடனுக்காக குழி தோண்டி பக்தர்களை படுக்க வைத்து, மண்ணை போட்டு மூடுவர். அம்மன் அந்தக் குழியை தாண்டியவுடன் குழியில் இருந்து பக்தர்களை வெளியில் எடுப்பர். இதன் மூலம் நேர்த்தி கடன் செலுத்துபவர்களின் உடல் நோய் உள்ளிட்ட அனைத்துக்கும் தீர்வு கிடைக்கும் என்பது ஐதீகம்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவ்வாறு குழி தோண்டி பக்தர்களை படுக்க வைப்பதற்கு அரசு தடை விதித்தது. இதனால் பக்தர்கள் ரோட்டில் வரிசையாக படுத்து இருப்பர் அவர்களை அம்மன் கடந்து செல்வது வழக்கம். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் இந்த திருவிழாவில் நேற்று முன் தினம் அம்மனுக்கு கண் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று மாலை பக்தர்கள் முளைப்பாரி எடுத்து வந்தனர். மேலும் நேர்த்திக் கடனுக்காக குழிமாற்று திருவிழாவில் ரோட்டில் படுத்து இருந்த பக்தர்களை முத்தாலம்மன் சிலை உடன் பூசாரி கடந்து சென்றார். அதன் பின்னர் ஊர் எல்லையில் முத்தாலம்மன் சிலை மற்றும் முளைப்பாரிகள் கரைக்கப்பட்டன. இந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்தி கடன் செலுத்தினர்.