திருப்புத்தூர் அருகே 3000 பழமையான ஈமச்சின்னங்கள் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11ஏப் 2023 04:04
திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே தென்மாவலி ஊராட்சியில் ஓலைக்குடிப்பட்டிக் கண்மாய் பகுதியில் ஆ.பி.சீ.அ.கல்லுாரி வரலாறு பேராசிரியர்கள் பெருங்கற்கால வட்டக்கல் மற்றும் ஈம,இடுகாடு சின்னங்களை கண்டறிந்தனர்.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோயில் ஒன்றியத்தின் எல்லைக் கிராமமாக ஓலைக்குடிப்பட்டி உள்ளது. இக்கல்லுாரி மாணவர் அபினேஷ் என்பவர் இப்பகுதியில் வரலாறு சின்னங்கள் குறித்து கல்லுாரியில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து வரலாறுதுறை பேராசிரியர்கள் தனலெட்சுமி,வேல்முருகன்,சஞ்சீவி, சிவசந்திரன் மற்றும்வி.ஏ.ஓ.குணசேகரன், மாணவர்கள் உள்ளிட்ட குழு அப்பகுதியில் கள மேற்பரப்பு ஆய்வு செய்தனர். அதில் ஓலைக்குடிப்பட்டிக் கண்மாய் பகுதியில் 25க்கும் மேற்பட்ட வட்டக் கல் அமைப்புகளும், நுாற்றுக்கும் மேற்பட்ட பெரிய,சிறிய அளவிலான சேதமடைந்த ஈமத்தாழிகள் கண்டறியப்பட்டன. அதில் சில இடங்களில் நிலத்தை தோண்டி பார்த்த போது பெரிய அளவிலான முழுமையான ஈமத்தாழி எனப்படும் முதுமக்கள் தாழி தெரிந்தது. மேலும் முன்னோர்கள் பயன்படுத்திய மண் கிண்ணம்,தட்டு.உடைந்த குவளைகள்,சிறிய மண் கலயங்களின் உடைந்த பகுதிகளையும் இக்குழுவினர் கண்டறிந்தனர். ’இந்த சின்னங்கள் ‛பெருங்கற்காலம் மற்றும் முன் வரலாறு காலத்தைச் சேர்ந்தது என்றும் சங்க காலமான கி.மு.3ம் நூற்றாண்டு முதல் கி.பி.3ம் நாற்றாண்டு வரையிலான காலத்தைச் சேர்ந்த இடுகாடு பகுதியாக இருக்கலாம். இவை 3 ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய வட்டக்கல்,ஈமத்தாழி முறையாகும். காலத்தால் சேதமடைந்துள்ள மேற்பரப்பில் முறையான கள ஆய்வு செய்தால் மேலும் பல வரலாறு தொல்லியல் எச்சங்கள் கிடைக்கலாம் ’ என்றும் இக்குழுவினர் தெரிவித்தனர். இக்குழுவினர் கடந்த ஆண்டு ஏரியூர், உலகினிப்பட்டி பகுதியிலும் தொல்லியல் சான்றுள்ள பகுதி கண்டறிந்துள்ளனர்.