பதிவு செய்த நாள்
14
ஏப்
2023
12:04
காஞ்சி மஹாபெரியவரை தரிசிக்க வந்த பக்தர் ஒருவர், என் குடும்பத்தில் யாராவது ஒருவருக்கு மாறி மாறி உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. என்ன செய்வது என புலம்பினார்.
அவரை ஓரமாக நிற்கச் சொல்லி விட்டு, பிறருக்கு தரிசனம் கொடுக்க ஆரம்பித்தார் மஹாபெரியவர். அமைதியாக காத்திருந்தார் பக்தர். சிறிது நேரத்திற்கு பின், குலதெய்வம் கோயிலுக்கு நீ கடைசியாக எப்போது சென்றாய் எனக்கேட்டார் மஹாபெரியவர்.
சுவாமி. அது வந்து... ரொம்ப வருஷம் ஆகியிருக்கும் என தயங்கியபடியே கூறினார். பார்த்தீயா... பிரச்னை உன்னிடம்தான். நீ என்னதான் பூஜை செய்தாலும், குலதெய்வத்தின் அருள் இருந்தால் மட்டுமே அதற்கான பலன் கிடைக்கும். ஆண்டுக்கு இருமுறையாவது குலதெய்வம் கோயிலுக்கு செல்வது அவசியம். முடிந்தால் கோயிலுக்கு தேவையான உதவிகளை செய்து கொடு. பிறகு கோயிலின் மண்ணை ஒரு கைபிடி அளவு எடுத்து, மஞ்சள் துணியில் வைத்துக்கொள். அதை வீட்டு வாசலின் நிலைப்படியில் கட்டு. பிரச்னை ஓடிப்போய்விடும். குலதெய்வம் கோயில் ஜொலிச்சா, உன் குடும்பமும் ஜொலிக்கும் என சொல்லி பிரசாதம் கொடுத்தார்.
வெற்றி வந்து சேர... தமிழ்ப்புத்தாண்டின் ராஜாவாக புதன் உள்ளார். இவருக்கு அதிதேவதை பெருமாள். ஆண்டு முழுவதும் பெருமாளை வழிபட்டால் வெற்றி மீது வெற்றி வரும். வாரம்தோறும் புதனன்று பெருமாள் கோயிலுக்கு சென்று நெய்தீபம் ஏற்றி வழிபடுங்கள். ஓம் நமோ நாராயணாய என்னும் மந்திரத்தை தினமும் 108 முறை ஜபியுங்கள். முடிந்தால் விஷ்ணு சகஸ்ர நாமம், நாலாயிர திவ்ய பிரபந்தம் படியுங்கள்.
முழு முதற்கடவுள்: உலகிற்கு ஒளியையும், உயிர்களுக்கு வாழ்வையும் தருபவர் சூரியபகவான். இயற்கையில் இவரே முதன்மையானவர். பண்டைக்காலம் முதலே இவரை முழுமுதற்கடவுளாக வணங்கியுள்ளனர். சூரிய வழிபாடு உலகெங்கும் இருந்தது என்பதை எகிப்திய, கிரேக்க, சுமேரிய நாகரிகங்கள் எடுத்துச் சொல்கின்றன. அதில், சூரியபகவான் ஒளியாக திகழ்கிறார். அவரது தலைமுடி தங்கக் கதிர்களில் சுருண்டு கிடக்கிறது. ஒருபோதும் வெட்டப்படாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
உடல்நலத்துடன் வாழ...
வேதகாலம் முதலே சூரியனைப் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. ரிக்வேதம் சூரியனை மூன்றுவித அக்னியில் ஒன்றாக விவரிக்கிறது. யஜூர்வேதம் சகல உலகங்களையும் ஒளிபெறச் செய்பவன் என்று போற்றுகிறது. அதர்வண வேதம் சூரியனை வழிபட்டவர்கள் இதய நோயிலிருந்து விடுபடுவர் என்று வழிகாட்டுகிறது. தினமும் இவரை வணங்கினால் உடல் நலத்துடன் வாழலாம்.
லட்சுமி கடாட்சத்திற்கு...
தமிழ்ப்புத்தாண்டு அன்று வீட்டில் உள்ள பெரியவர்கள் பஞ்சாங்கம் படிப்பது வழக்கம். எதற்காக இந்த நடைமுறை என்ற கேள்வி பலரது மனதில் உதிக்கலாம். அதற்கு பதில் இதோ...பஞ்சாங்கம் என்பது யோகம், திதி, கரணம், வாரம், நட்சத்திரம் என ஐந்து அங்கங்களை கொண்டது. இந்த ஐந்தையும் அறிந்தால் பல நன்மை உண்டு. அவை,
திதி - லட்சுமியின் கடாட்சம் கிடைக்கும்.
வாரம் - நீண்ட ஆயுளை பெறலாம்.
நட்சத்திரம் - முன்வினைகள் நீங்கும்.
யோகம் - நோயற்ற வாழ்வு உண்டாகும்.
கரணம் - முயற்சியில் வெற்றி கிடைக்கும். எனவே தினமும் மேற்சொன்ன ஐந்து அங்கங்களை பஞ்சாங்கத்தில் படியுங்கள். முடியாதவர்கள், சித்திரை முதல் நாளான இன்று மட்டுமாவது படிக்கலாம். பூஜையறையில் தீபம் ஏற்றி, குலதெய்வம், இஷ்ட தெய்வத்தை வழிபட்ட பின், பஞ்சாங்கத்தை படியுங்கள். வீட்டில் படிக்க வசதி இல்லையெனில், கோயிலுக்குச் சென்று பஞ்சாங்கம் படிப்பதைக் கேட்கலாம்.
புதிய வேலையை செய்யப்போறீங்களா...: மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள், சமநோக்கு நாள் என்று பஞ்சாங்கத்தில் பார்த்திருப்பீர்கள். இதற்கு என்ன அர்த்தம்? அதாவது ஒரு நாளில் எந்த நட்சத்திரம் உள்ளதோ, அதற்கேற்ப இந்த நாள் மாறுபடும். 1. மேல்நோக்கு நாள்: ரோகிணி, திருவாதிரை, பூசம், உத்திரம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி ஆகியவை ஊர்த்துவமுக நட்சத்திரங்கள். இந்நாளில் மேல் நோக்கி வளரும் பயிர்களை விதைப்பது, மரங்களை நடுவது, உயரமான கட்டடங்களை கட்டத் தொடங்கலாம். 2. கீழ்நோக்கு நாள்: பரணி, கார்த்திகை, ஆயில்யம், மகம், பூரம், விசாகம், மூலம், பூராடம், பூரட்டாதி ஆகியவை அதோமுக நட்சத்திரங்கள். இந்நாளில் ஆழ்துளைக் கிணறு தோண்டுதல், சுரங்கப் பணிகளை மேற்கொள்ளுதல், கிழங்கு வகைச் செடிகளை பயிரிடுதல் முதலான செயல்களை தொடங்கலாம். 3. சமநோக்கு நாள்: அசுவினி, மிருகசீரிடம், புனர்பூசம், அஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், கேட்டை, ரேவதி ஆகியவை த்ரியக்முக நட்சத்திரங்கள். இந்நாளில் வாகனம், பட்டுப்புடவை, நகை, செல்லப்பிராணிகள், பசு, காளை வாங்குதல், சாலை அமைத்தல், வாசக்கால் வைத்தல், வயல் உழுதல் ஆகிய பணிகளை செய்யலாம்.
சித்திரை வந்தாச்சு! :
* பிரம்மா உலகைப் படைத்தது சித்திரை முதல் நாள்தான்.
* சூரியபகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, காலையில் திறந்த வெளியில் அவருக்கு பூஜை செய்வர்.
* தமிழ்ப்புத்தாண்டான இன்று வேப்பம் பூக்களைச் சேகரித்து, புளி, வெல்லம் சேர்த்து பச்சடி செய்வது சிறப்பு. அதாவது வாழ்க்கை என்பது இந்த பச்சடியை போன்றதாகும். இனிப்பு, கசப்பு, புளிப்பு என பல்வேறு வகையான அனுபவங்களை கொண்டது என்பதை இது உணர்த்துகிறது.
* சித்திரையில் வரும் பவுர்ணமி சிறப்பு வாய்ந்தது. இந்நாளில்தான் சித்திர குப்தர் தோன்றினார். நாம் செய்யும் பாவ, புண்ணியங்களை கவனித்து அதை குறிப்பு எடுப்பவர் இவர். இந்நாளில் விரதம் இருந்து, நாங்கள் இனியும் பாவம் செய்யாமல் இருக்க நீதான் துணையாக இருக்க வேண்டும் என வேண்டுவர்.
* அட்சய திரிதியை என்னும் பொன்னான நாள் வருவதும் இம்மாதமே. அன்று அரிசி, கோதுமை, தயிர், மோர், குடை, ஆடை, தானியம், பழம் போன்றவற்றை தானம் செய்தால் வளமான வாழ்வு அமையும்.
* ஹிந்து மதத்தை தழைக்கச் செய்த இரு ஞானிகள் தோன்றிய மாதம். ஆம்! ஆதிசங்கரர், ராமானுஜர் என இரு சூரியன்கள் உதித்தார்கள்.
சிறப்பான எதிர்காலம் அமையும்: நவக்கிரக நாயகன் எனப் பூஜிக்கப்படும் சூரியபகவான் இன்று மேஷ ராசியில் நுழைவதால் தமிழ்ப்புத்தாண்டு பிறக்கிறது. இன்று சூரியனை வணங்கி, கீழ்க்கண்ட ஸ்லோகத்தை சொல்லலாம். ஜபாகுஸும ஸங்காஸம் காஸ்யபேயம் மஹாத்யுதிம்தமோரிம் ஸர்வபாபக்னம் ப்ரணதோஸ்மி திவாகரம்இந்த பரிகாரத்தை கடைபிடித்தால், வாழ்க்கை சிறப்பாக அமையும்.