பதிவு செய்த நாள்
14
ஏப்
2023
06:04
அவிநாசி: தமிழக அரசின் பல்வேறு துறைகளில் நிதி ஒதுக்குவதற்கான மானிய கோரிக்கை விவாதத்தில் அவிநாசியில் உள்ள அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் தேர் ஓடும் நான்கு ரத வீதிகளில் உள்ள மேல்நிலை மின்கம்பிகள் புதைவடங்களாக மாற்றப்படும் என அறிவிப்பு. தமிழகத்தின் புகழ்பெற்ற மூன்றாவது பெரிய தேரும்,சுந்தரமூர்த்தி நாயனாரால்,பாடல் பெற்ற தலமாகவும்,கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையானதாக அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் விளங்குகிறது. நடப்பாண்டில் ஏப்ரல் 25ம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரை தேர் விழா தொடங்குகிறது. அதில்,மே 2ம்,3ம் தேதிகளில் பெரிய தேர் என்று அழைக்கப்படும் சோமஸ் ஸ்கந்தர் எழுந்தருளும் தேர் இரண்டு நாட்களும், மே 4ம் தேதி கருணாம்பிகை அம்மன் தேரும் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் தேரானது,150 டன் எடையும், அலங்காரத்துடன் 110 அடி உயரமும், 21அடி அகலமும் கொண்டதாகும். நான்கு ரத வீதிகளும் சேர்த்து 750 மீட்டர் தேர் பவனி வரும் பாதையாகும். இதனால் தேர் நிலையில் இருந்து புறப்பட்டு மீண்டும் நிலை சேரும் வரை உள்ள அனைத்து மின் கம்பங்களிலிருந்து மின் கம்பிகள் கழற்றப்பட்டு மின் சப்ளை நிறுத்தப்படும்.
தேர் விழாவில், தேர் நிலையில் இருந்து பக்தர்களால் வடம் பிடித்து மேற்கு ரத வீதி, வடக்கு ரத வீதி, கிழக்கு ரத வீதி என தேர் பவனி வந்து மீண்டும் கோவை ஈரோடு சாலையில் தேர் நிலை சேர்க்கப்படும். இதில் ஒவ்வொரு வீதியிலும் தேர் நுழையும் போதும், ஒரு வீதியில் இருந்து மற்றொரு வீதிக்கு வெளியேறும் போதும், மேலே செல்லும் மேல்நிலை மின் கம்பிகளின் சப்ளை நிறுத்தப்பட்டு,மின் கம்பிகள் கம்பத்திலிருந்து கழற்றி விடப்படும். பின்னர் ஒரு வீதியில் இருந்து மற்றொரு வீதிக்குச் சென்ற பிறகு உடனடியாக மின்வாரிய ஊழியர்கள் மூலம் கம்பிகள் மீண்டும் இணைக்கப்படும். தேர் முழுமையாக நிலை சேர்ந்த பிறகு நான்கு ரத வீதிக்கும் மின் சப்ளை மீண்டும் தரப்படும்.இதில், மேற்கண்ட வீதிகளில், மளிகை கடை, துணிக்கடை, நகைக்கடை, பாத்திரக் கடை, அழகு நிலையம், பொதுத்துறை வங்கிகள், திருமண மண்டபங்கள் என ஏறத்தாழ 400ம் மேற்பட்டவை உள்ளது. சுமார் 250ம் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் மானிய கோரிக்கைகள் மீதான நடைபெறும் விவாதத்தில்,திருநெல்வேலி, ஸ்ரீரங்கம், அவிநாசி, திருப்பரங்குன்றம், திருச்செங்கோடு, கரூர் மற்றும் காஞ்சிபுரத்தில் உள்ள கோவில்களின் தேரோடும் மாடவீதிகளில் செல்லும் மேல்நிலை மின் கம்பிகள் புதைவடங்களாக மாற்றப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து மின்வாரிய நகர்ப்புற செயற்பொறியாளர் சிவசண்முகத்திடம் கேட்டபோது: மின்வாரியத்திலிருந்து இப்பணிகளுக்கான அறிவிப்பு வந்தவுடன் மதிப்பீடு செய்து,பணிகள் துவங்குவதற்கு உயரதிகாரிகளின் ஆலோசனை பெற்று பணிகள் துவங்கும்.மேலும்,வணிக நிறுவனங்களுக்கு செல்லும் உயரழுத்த மின்பாதை, வீடுகளுக்கு செல்லும் மின் பாதைகள் என இரு வேறு மின் பாதைகள் இதில் உள்ளது. அதனை தனித்தனியாக செயல்படுத்துவதற்கும், கேபிள் பதிப்பதற்கான பாதைகளுக்காக இடமும் தேர்வு செய்ய வேண்டும். அதன்பிறகு, பொதுமக்களுக்கு மின் சேவைகள் பாதிக்காத வகையில், விரைவில் பணிகள் முடிப்பதற்கான திட்டங்களை தயார்படுத்தி, அதன் பின்பு பணிகளை துவங்குவோம். அடுத்த சித்திரை தேர் விழாவிற்குள் இப்பணிகளை முடிந்துவிடுவோம் என்றார்.