ராஜபாளையம்: ராஜபாளையம் திரவுபதி அம்மன் கோயில் பங்குனி பொங்கல் பூக்குழி திருவிழா நேற்று மாலை நடந்தது. திரளான பக்தர்கள் பூ இறங்கி தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.
பங்குனி பொங்கலை முன்னிட்டு ஏப்.4ல் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. தினமும் பல்வேறு அலங்காரங்களில் வீதி உலா வந்து அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவின் சிறப்பு நிகழ்வான பூக்குழி வைபவம் நேற்று நடந்தது. அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் அதனை தொடர்ந்து பூக்குழி திடலில் அக்கினி வார்ப்பு நடந்தது. மாலை 4:30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட அம்மன் வீதி உலா சுற்றி வந்த பின் காப்பு கட்டிய பக்தர்கள் பூ இறங்கி தங்கள் நேர்த்தி கடன்களை செலுத்தினர். விழாவை முன்னிட்டு பழைய பஸ் ஸ்டாண்ட் வழியே போக்குவரத்து தற்காலிகமாக திருப்பி விடப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை ராஜபாளையம் டி.எஸ்.பி., ப்ரீத்தி தலைமையிலான போலீசார் செய்திருந்தனர்.