பதிவு செய்த நாள்
14
ஏப்
2023
06:04
ராமேஸ்வரம்: தமிழகத்தில் முக்கிய அரசியல் தலைவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டு, கட்சி சரிவை சந்திக்கும் என ராமேஸ்வரம் கோயிலில் குருக்கள் பஞ்சாங்கம் வாசித்தார்.
தமிழ் புத்தாண்டு யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இன்று மதியம் 12:40 மணிக்கு கோயில் குருக்கள் சஞ்சீவி பஞ்சாங்கம் வாசித்தார். இதில், இந்தியா கல்வி, தகவல் தொழில்நுட்பத் துறையில் பெரும் வளர்ச்சி அடையும். இந்தியாவுக்கு சிங்கப்பூர், மலேசியா, பங்களாதேஷ், பர்மா நாடுகள் முழு ஒத்துழைப்பு வழங்கி, ஆசியாவில் முக்கிய இடத்திற்கு முன்னேறும். இந்தாண்டு வடகிழக்கு சீசனில் புதிய புயல்கள் உருவாகி தமிழகத்தில் சூறாவளி காற்று, பலத்த மழை பெய்யும். தமிழக அணைகள் நிரம்பி வெள்ளம் ஏற்படும். வட மாநிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கும்.
விலங்குகளுக்கு குறிப்பாக கோழிகளுக்கு புதிய நோய் தாக்கி, முட்டை உற்பத்தி பாதித்து விலை உயரும். குழந்தைகளுக்கு புதிய காய்ச்சல் பரவும். அரசால் மடாதிபதிகள், துறவிகளுக்கு சிக்கல் ஏற்படும். தமிழகத்தில் முக்கிய அரசியல் தலைவர்களுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டு, கட்சி சரிவை சந்திக்கும். சீனாவுடன் எல்லை பிரச்சினை அதிகரிக்கும். நம் ராணுவம் புதிய உபகரணங்களை வாங்கி, அதனை முறியடிக்கும். கல்வியில் மாணவர்கள் அதிகம் தேர்ச்சி பெற்று தமிழகம் முதலிடம் பிடிக்கும். தங்கம் வெள்ளி விலை மேலும் உயரும். ஹிந்து அறநிலைத்துறையின் ஆன்மீக மரபுகள் மீறல் குறித்து மத்திய அரசு தலையிட்டு தீர்வு காணும் என தெரிவித்தார். இதில் கோயில் ஆய்வாளர் பிரபாகரன், கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், பேஸ்கார்கள் கமலநாதன், பஞ்சமூர்த்தி, ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, பா.ஜ.,நிர்வாகி ராமு பலர் பங்கேற்றனர்.