பரமக்குடி: பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் உய்யவந்தாள் அம்மன் கோயில் 30 வது ஆண்டு விழா நடந்தது.
இக்கோயிலில் ஏப்., 5 அன்று மாலை 6:00 மணிக்கு காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. ஏப்., 14 காலை 8:00 மணிக்கு நடந்த பொங்கல் விழாவில், ஏராளமான பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர். மாலை 4:30 மணிக்கு வைகை ஆற்றில் இருந்து அக்னி சட்டிகளை எடுத்து பக்தர்கள் மேள தாளம் முழங்கு கோயிலை நோக்கி சென்றனர். அன்று இரவு அன்னதானமும், 9:00 மணிக்கு பூத்தட்டுகள் நகர் வலம் வந்து உய்யவந்தாள் அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு வைகை ஆற்றில் இருந்து பால் குடங்கள் புறப்பாடாகி, நகர் வலம் வந்து பக்தர்கள் கோயிலை அடைந்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பிரசாதங்கள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன. இன்று கருப்பணசாமிக்கு அபிஷேகம் நடக்கிறது. ஏற்பாடுகளை எமனேஸ்வரம் ஆண்டிப்பண்டாரத்தார் சமூக நல சங்கத்தினர் செய்திருந்தனர்.