கோயில் வளாகத்தில் பறக்கும் டூவீலர்கள்: பயத்தில் பரிதவிக்கும் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஏப் 2023 05:04
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே கோயில் வளாகத்திற்குள் டூவீலர்களை அனுமதிப்பதால் அவற்றை சிலர் வேகமாக ஓட்டி பக்தர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகின்றனர்.
பிரான்மலை மங்கைபாகர் தேனம்மை கோயிலுக்கு செல்ல ரதவீதி மற்றும் பாப்பாபட்டி சாலை வழியாக நுழைவுவாயில் உள்ளது. ரத வீதியில் இருந்து கோயிலுக்குச் செல்ல தெப்பக்குளத்தை ஒட்டி 30 மீட்டர் தூரத்திற்கு வரவேற்பு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மண்டபம் டூவீலர்களில் வரும் இளைஞர்கள் பக்தர்களுக்கு இடையூறாக அதிக வேகத்தில் ஓட்டியும், ஹாரன் எழுப்பியவாறும் செல்கின்றனர். டூவீலர்கள் மோதி இதுவரை பலர் காயம் அடைந்திருக்கின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் இவ்விபத்துகளை அபசகுணமாக கருதி மனம் வருந்துகின்றனர். எனவே கோயில் மண்டப வளாகத்திற்குள் டூவீலர்களை அனுமதிக்காத வகையில் கோயில், ஊராட்சி நிர்வாகங்களும் போலீசாரும் இணைந்து நடவடிக்கை எடுக்க பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.