பதிவு செய்த நாள்
16
ஏப்
2023
05:04
தேவிபட்டினம்: தேவிபட்டினம் நவபாஷாண நடைமேடையில், சூட்டை தணிக்க, காயர் விரிப்புகள் அமைக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தேவிபட்டினத்தில் பிரசித்தி பெற்ற நவபாஷாண நவக்கிரகம் கடலுக்குள் அமைந்துள்ளது. கடலுக்குள் உள்ள நவகிரகங்களை பக்தர்கள் சென்று வழிபடும் வகையில், கடற்கரையில் இருந்து நவக்கிரகம் அமைந்துள்ள பகுதி வரை, நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் நடந்து செல்லும் நடைபாதை முழுவதும் டைல்ஸ் கற்கள் பதிக்கப்பட்டுள்ளதால், தற்போது சுட்டெரித்து வரும் கடும் வெயிலால், காலை 11:30 மணிக்கு மேல், மாலை 4:00 மணி வரை, நடைபாதை டைல்ஸ் கற்கள் சூடாகி விடுகின்றன. நடைபாதை சூட்டால், பக்தர்கள் பாதிப்படைந்து வரும் நிலையில், நவபாஷாண ஊழியர்கள் சார்பில், நடைபாதை முழுவதும் அவ்வப்போது தண்ணீர் தெளித்து சூட்டை தணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். எனவே, பக்தர்களுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தும் வகையில், சூட்டை தணிக்க நடைபாதையில் காயர் விரிப்புகள் விரிக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.