பதிவு செய்த நாள்
26
ஏப்
2023
07:04
பாலக்காடு: கேரளா மாநிலம் பாலக்காடு கல்பாத்தி அருகேயுள்ளது வேட்டைக்கொருமகன் கோவில். இக்கோவில் மூலவர் பூரண புஷ்கலாம்பாள் சமேத ஹரிஹரபுத்திரர். உபதேவர்கள் பால கணபதி, பால சுப்பிரமணியர் மற்றும் நாக தெய்வங்கள். இந்த நிலையில் இக்கோவில் மூலவருக்கு இன்று மகா கும்பாபிஷேகம் பிஹமஸ்ரீ நெல்லிச்சேரி ஸ்ரீனிவாச பட்டாச்சாரியாவின் தலைமையில் விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஸ்ரீமத் பாகவத சப்தாஹம், சம்பூரண நாராயணீயம், நாம சங்கீர்த்தனம், ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம், ஸ்ரீ சாஸ்தா மகாத்மியம், ஹரி கதை, சகல தேவதை அஷ்டகங்கள் உட்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்து முடிந்தன. மகா கும்பாபிஷேக தினமான இன்று காலை 4.30 மணிக்கு மகா கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சிகள் ஆரம்பித்தனர்.
தொடர்ந்து நித்திய பூஜை, யாகசாலை புண்ணியாகம், பஞ்சாக்னி ஹோமம், அந்த ஹோமம், பூர்ணாஹுதி, அக்னிகும்பமாரோகனும், யாத்ராதானம், முகூர்த்ததானம், கோதானம், வேதபாராயணம் சமாப்தி, தீபாராதனை, விமான அபிஷேகம் ஆகியவை நடைபெற்றன. காலை 10 மணி அளவில் மூலவருக்கும் உப தேவர்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆகாய கலசத்தில் திருத்தீர்த்தம் ஊற்றும் வைபவம் காண ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்திருந்தனர். தொடர்ந்து தசதரிசனம், மகாநிவேதியம், மகா தீபாராதனை, மகத் ஆசீர்வாதம் ஆகியவை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு மூன்று யானைகளின் அணிவகுப்புடன் பஞ்சவாத்தியம் முழங்க காழ்ச்சீவேலி நடைபெற்றது. 7 மணிக்கு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மேளதாளத்துடன் அஸ்வவாகனத்தில் உற்சவர் திருவீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.