பதிவு செய்த நாள்
02
மே
2023
07:05
உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றியம், குருமஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்டது, சீட்டணஞ்சேரி கிராமம். இக்கிராமத்தில், ஹிந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான சிவகாம சுந்தரி உடனுறை காலீஸ்வரர் கோவில் உள்ளது.
பழமையான இக்கோவிலில், ஒவ்வொரு ஆண்டும், சித்திரை மாத விழாவின் போது, தேரோட்டம் விமரிசையாக நடப்பது வழக்கம். கடந்த 1940ம் ஆண்டுக்கு பின், தேர் பழுது மற்றும் நிர்வாக சீர்கேடு போன்ற காரணங்களால், தேரோட்டம் இல்லாமல், சித்திரை விழா மட்டும் நடைபெற்று வந்தது. இதையடுத்து, இக்கோவிலுக்கு புதிதாக, 60 லட்சம் ரூபாய் செலவில், 36 அடி உயரம் உடைய அழகிய மரத்தேர் செய்யப்பட்டு, 82 ஆண்டுகளுக்கு பின், கடந்த ஆண்டு தேரோட்டம் நடந்தது. அதை தொடர்ந்து, இந்த ஆண்டுக்கான சித்திரை பிரம்மோற்சவ விழா, ஏப்., 26ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும், காலையில் தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜைகளும், இரவு சுவாமி ஊர்வலம் நிகழ்ச்சியும் நடந்தன. நேற்று காலை 7:00 மணிக்கு, மலர் அலங்காரத்தில் சுவாமி தேரில் எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அப்போது, ஏராளமான பக்தர்கள் ஒன்றிணைந்து, தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். மாடவீதி வழியாக தேர் வீதியுலா நடந்து, காலை 10:00 மணிக்கு தேர் கோவிலை வந்தடைந்தது. இதில், சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த நுாற்றுக்கணக்கானோர் பங்கேற்று, தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.