பதிவு செய்த நாள்
02
மே
2023
11:05
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.
உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழா ஏப்.,23ல் கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. சித்திரை திருவிழாவின் 10ம் நாளான இன்று (மே.2ல்) மீனாட்சி அம்மன்-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. திருக்கல்யாணத்தை முன்னிட்டு சொக்கநாதருடன், மீனாட்சி அம்மன் சர்வ அலங்காரத்தில் ஆடி வீதி, சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
முன்னதாக காலை மலர்களால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்த மணமேடையில் சொக்கநாதர் எழுந்தருளினார். பின்னர் பிரியாவிடை அம்மனுடன், சர்வ அலங்காரத்தில் மணக்கோலத்தில் மீனாட்சி அம்மன் மணமேடையில் எழுந்தருளினார். பின்னர் வேத மந்திரங்கள் ஒலிக்க, பவளக்கனிவாய் பெருமாள் தாரைவார்த்துக் கொடுக்க, மீனாட்சியின் கழுத்தில் திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. அப்போது திருமண நிகழ்ச்சியை காண வந்திருக்கும் மணமான பெண்கள், தங்கள் கழுத்தில் உள்ள தாலியை மாற்றி புதுத்தாலி அணிந்து கொண்டனர். காலை 8.35 மணி முதல் 8.59 மணிக்கு மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மீனாட்சி அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவித்த போது சுமங்கலி பெண்கள் மஞ்சள் கயிறு மாற்றி அம்மனை வழிபட்டனர். திருக்கல்யாண நிகழ்ச்சியில், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் கலந்து கொண்டார். திருக்கல்யாணம் காலையில் முடிந்த நிலையில், சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் விருந்து நடைபெற்றது.
திருக்கல்யாணம் முடிந்தபின் அம்மனும், சுவாமியும் திருக்கல்யாண கோலத்தில் பழைய திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பாலித்தனர். மாலையில் மாப்பிள்ளை யானை வாகனத்திலும், புதுப்பெண் மீனாட்சி பூப்பல்லக்கிலும் வீதி உலா வருவார்கள். தம்பதியரின் அழகைக் காண பட்டி தொட்டி எங்கும் இருந்தும் மக்கள் திரண்டு வந்துள்ளனர். திருக்கல்யாணத்தை கண்ணார கண்டால் நம் வீட்டில் மணமாகாமல் இருக்கும் மகளுக்கோ மகனுக்கோ திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.
வாகனம் நிறுத்துமிடங்கள்: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை(மே 2)காலை 8:35 மணி - 8:59 மணிக்குள் நடக்கிறது. மே 1 இரவு 12:00 மணி முதல் ஆவணி மூல வீதிகளில் வாகனங்கள் செல்ல, நிறுத்த அனுமதியில்லை. மே 2 காலை 6:00 மணி முதல் அனுமதி சீட்டுடன் வருவோர் கீழ்கண்ட இடத்தில் நிறுத்தலாம். மே 2 அதிகாலை 5:00 மணி முதல் திருக்கல்யாணம் காண கார், டூவீலரில் வரும்,அனுமதி சீட்டு இல்லாதோர்கிழக்கு, தெற்கு, வடக்கு மாசி வீதிகளில் வாகனங்களை இடையூறின்றி நிறுத்தலாம். கீழ ஆவணி மூல வீதியில் வாகனங்களை நிறுத்த அனுமதியில்லை.