பதிவு செய்த நாள்
02
மே
2023
12:05
அவிநாசி: அவிநாசி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ்வரர் தேரோட்டம் இன்று நடைபெறுகின்றது.
அவிநாசியில் சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடல் பெற்ற தலமும்,கொங்கேழு சிவாலயங்களுல் முதன்மை பெற்ற தலமுமான அவிநாசிலிங்கேசுவரர் கோவிலில் ஆண்டு தோறும் சித்திரைத் தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு சித்திரை தேர்த் திருவிழா,கடந்த 25ம் தேதி கோவிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து, நேற்று அதிகாலை பூர நட்சத்திரத்தில் பஞ்ச மூர்த்திகள் திருத்தேருக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். அதனைத் தொடர்ந்து இன்று காலை 8 மணி அளவில் பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், கௌமார மடாலயம் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள்,கூனம்பட்டி இராஜசரவண மாணிக்கவாசக சுவாமிகள்,அவிநாசி திருப்புக்கொளியூர் வாகீசர் மடாலயம் காமாட்சி தாச சுவாமிகள்,அமைச்சர் பெருமக்கள்,ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆகியோர் முன்னிலையில் பக்தர்கள் பெரிய தேரை வடம் பிடித்தனர். மீண்டும் நாளை காலை பெரிய தேர் வடம் பிடித்து நிலை நிறுத்துதல்,4ம் தேதி காலை ஸ்ரீ அம்மன் தேர் வடம் பிடித்தல், ஸ்ரீ சுப்பிரமணியர், ஸ்ரீ சண்டிகேஸ்வரர், ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் தேர்கள் வலம் வருதல், 5ம் தேதி காலை வண்டித்தாரை மற்றும் இரவு பரிவேட்டை, 6ம் தேதி மாலை தெப்பத்தேர், 7ம் தேதி நடராஜர் தரிசனம் மாலை கொடி இறக்கம், 8ம் தேதி காலை மஞ்சள் நீர் விழா, இரவு மயில்வாகனம் காட்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.