பதிவு செய்த நாள்
03
மே
2023
06:05
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், தெரசா படம் பொறித்த கவரில், விபூதி, குங்கும பிரசாதம் வினியோகித்த இரண்டு குருக்கள், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலிற்கு தினமும், பல மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்களும், பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்களும், வெளிநாட்டு பக்தர்களும் வருகை தருகின்றனர்.
பிரசாத பாக்கெட்: பக்தர்களுக்கு, கோவிலில் விபூதி, குங்கும பிரசாதம் பாக்கெட்டுகளில் வழங்கப்படுகிறது. இந்த பாக்கெட்டுகள் தயாரிக்க, கோவிலில் இயந்திரம் உள்ளது. மேலும், விபூதி தயாரிக்கவும் தனியாக கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது. இயந்திரம் மூலம் பாக்கெட் செய்யப்படும் விபூதி, குங்கும பிரசாத பாக்கெட்டுகளை, கோவில் பணியிலுள்ள குருக்களிடம் கொடுத்து, பக்தர்களுக்கு வினியோகம் செய்ய வேண்டும். ஆனால், கோவில் நிர்வாகம் அவ்வாறு செய்வதில்லை.
தனியார் விற்பனை: அதனால் கோவில் குருக்கள், பிரசாத பாக்கெட் தயாரிக்கும் தனியாரிடமிருந்து, 1,000 பாக்கெட்டுகள், 600 ரூபாய் என, சொந்த பணம் கொடுத்து வாங்கி, பக்தர்களுக்கு வினியோகம் செய்கின்றனர். பிரசாத பாக்கெட்டுகள் விற்பனை செய்வோர், நன்கொடையாளர்கள் அளிக்கும் பிரசாத கவர்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
அதன்படி, திருவண்ணாமலையிலுள்ள, ‘மேத்யூ கார்மென்ட்’ நிறுவனத்தினர், ‘தெரசா’ படத்துடன் தங்கள் முகவரியை ஒரு பக்கமும், மற்றொரு பக்கம், அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன் படமும் உள்ள கவரை பிரிண்ட் செய்து கொடுத்துள்ளனர். அந்த கவரை கோவிலில் நேற்று முன்தினம், பக்தர்களுக்கு குருக்கள் வினியோகம் செய்தனர். இதை கண்டு பக்தர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், இது குறித்த தகவல் வைரலானது.
இந்து முன்னணி தர்ணா: இதையடுத்து, இந்து முன்னணி, திருவண்ணாமலை நகர தலைவர் செந்தில், திருவண்ணாமலை டவுன் போலீசில் நேற்று புகார் அளித்தார். அதில், கோவில் மூலஸ்தானத்தில், கிறிஸ்துவ அடையாளம் அச்சிட்ட பிரசாத கவர், கோவில் அறநிலையத்துறை நிர்வாகத்திற்கு தெரியாமல் எப்படி வந்தது. இதை விசாரித்து சம்பந்தபட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், கோவில் நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்ட இந்து முன்னணியினர், நேற்று காலை, 10:00 முதல், 12:00 மணி வரை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதால், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
2 குருக்கள் ‘சஸ்பெண்ட்’: இந்நிலையில், கோவில் இணை ஆணையர் குமரேசன், கோவிலில் சிவாச்சாரியார்கள், விபூதி, குங்குமத்தை பாக்கெட்டுகளாக வழங்காமல், பக்தர்களின் கையில் தனியாக வழங்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். மேலும், தெரசா படம் பொறித்த விபூதி பிரசாத பாக்கெட்டுகளை வினியோகம் செய்த, சோமநாத குருக்கள், முத்துக்குமாரசாமி குருக்கள் ஆகிய இருவரை, ஆறு மாத காலத்திற்கு, தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.