பதிவு செய்த நாள்
05
மே
2023
07:05
அவிநாசி: அவிநாசி வட்டம்,தெக்கலூர் கிராமத்தில் உள்ள வெள்ளாண்டிபாளையத்தில் ஸ்ரீ சக்திமிகு மாகாளியம்மன் கோவிலில் அரசு மற்றும் வேம்பு கல்யாண உற்சவ விழா நடைபெற்றது.
அவிநாசி அடுத்த தெக்கலூர் ஊராட்சிக்குட்பட்ட வெள்ளாண்டிபாளையத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சக்திமிகு மாகாளியம்மன் கோவிலில் அரசு மற்றும் வேம்பு மரத்திற்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக நேற்று முன்தினம் நிச்சயதார்த்தம்,பட்டினி சீர் விருந்து, முகூர்த்தக்கால், புண்ணியாஹவாசனம்,கணபதி ஹோமம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் அரசு மற்றும் வேம்பு மரத்திற்கு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வடக்கு மற்றும் தெற்கு விநாயகர் கோவிலில் இருந்து,மணமகனான அரச மரத்தின் வீட்டாராக செல்லங் குல சமூகத்தாரும், மணப்பெண்ணான வேம்பு மர வீட்டாராக பொதுமக்களும் சீர்வரிசை எடுத்து வந்தனர். நேற்று காலை திருக்கலச பூஜை, ஹோம பூஜை,கலசாபிஷேகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொடர்ந்து அரசு மற்றும் வேம்பு மரத்திற்கு,திருப்புக்கொளியூர் வாகீசர் மடாலய காமாட்சி தாச சுவாமிகள் முன்னிலையில்,மகேஷ்சிவம், மணிகண்டசிவம், விஜய்சிவம்,சதீஷ் சிவம், சிவக்குமார் ஆகியோர் கலந்துகொள்ள திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்கார பூஜை மற்றும் அன்னதானம் நடைபெற்றது. திருமணத்தடை ,குழந்தை பாக்கியம் மற்றும் மழை பெய்ய வேண்டியும், விவசாயம் செழித்து ஊர்மக்கள் வளமுடன் வாழ அரசு மற்றும் வேம்பு மரத்திற்கு திருமணம் செய்து வைப்பது ஐதீகம் என அப்பகுதியினர் தெரிவித்தனர்.