ஆண்டிபட்டி: ஜம்புலிப்புத்தூர் கதலி நரசிங்கப் பெருமாள் கோயில் சித்திரைத்திருவிழாவில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் வடம் பிடித்து கோவிந்தா கோஷமிட்டு தேர் இழுத்தனர். ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள
இக்கோயில் சித்திரைத்திருவிழா ஏப்ரல் 25 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகளுடன் ஏப்ரல் 30 வரை பல்வேறு வாகனங்களில் வீதி உலா சென்று அருள்பாலித்தார். மே 1ல் சுவாமி திருக்கல்யாண உற்சவம், மே 2ல் சுவாமி குதிரை வாகனத்தில் வலம்வரும் நிகழ்ச்சிக்குப் பின் ஸ்ரீதேவி பூதேவியருடன் சுவாமி திருத்தேரில் எழுந்தருளினார். நேற்று மாலை விசேஷ பூஜைகளுக்குப் பின் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் வடம்பிடித்து கோவிந்தா கோஷமிட்டு திருத்தேர் இழுத்தனர். வடக்குத்தெருவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள தேர் இன்று மாலை மீண்டும் இழுக்கப்பட்டு எல்லையில் நிலைநிறுத்தப்படும். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் ஹரிஸ்குமார், கம்பம் கம்பராயப்பெருமாள் கோயில் செயல் அலுவலர் சுரேஷ் ஆகியோர் முன்னிலையில் விழா குழுவினர், பக்தர்கள் செய்திருந்தனர்.