பதிவு செய்த நாள்
05
மே
2023
04:05
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளினார்.
இக்கோயிலில் உள்ள ஜெனக நாராயண பெருமாள் சித்ரா பவுர்ணமி நாளில் இன்று அதிகாலை அதிர்வேட்டுகள் முழங்க போலீஸ் ஸ்டேஷன், தீயணைப்பு நிலையம், சென்று திரும்பி அனைத்து மண்டபடிக்கும் சென்று அருள்பாலித்தார். இதையடுத்து தெற்கு ரத வீதி, மேல ரத வீதி வழியே வைகையாற்றிற்கு வந்தார். அங்குள்ள சனீஸ்வரன் கோயிலில் அர்ச்சகர் ராமசுப்பிரமணியன் பூர்ண கும்ப மரியாதையுடன் சுவாமியை வரவேற்றார். இதையடுத்து வட்டபிள்ளையார் கோயிலில் அர்ச்சகர் ஸ்ரீபதி தலைமையில் சுவாமி கள்ளழகர் திருக்கோலத்தில் வைகையாற்றிற்கு சென்று காலை 8:50 மணிக்கு வெள்ளை குதிரை வாகனத்தில் ஆற்றில் இறங்கினார். தொடர்ந்து கள்ளழகர் வேடமணிந்த பக்தர்கள் சுவாமியின் மீது தண்ணீர் பீய்ச்சியடித்தனர்.
பக்தர்கள் ஏராளமானோர் சர்க்கரை, அவல் உள்ளிட்ட பிரசாதங்களில் சூடம் ஏந்தி "கோவிந்தோ....கோவிந்தோ..." கோஷம் எழுப்பி வரவேற்றனர். இவ்விழாவில் சுகாதாரம், குடிநீர் வசதிகளை பேரூராட்சி சார்பில் ஏற்பாடு செய்திருந்தனர். ஜெனகை மாரியம்மன் கோயில் முதல் வழிநெடுகிலும் பல்வேறு கட்சி, அமைப்பு, சமூக ஆர்வலர்கள் பக்தர்களுக்கு நீர்மோர், அன்னதானம் வழங்கினர். இதையடுத்து அழகர் மேற்கு கரையில் அமைந்திருந்த சத்து முதலியாரின் மண்டகபடியில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார். இந்நிகழ்வில் டி.எஸ்.பி., பாலசுந்தரம், இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஜெனகை மாரியம்மன் கோயில் செயல் அலுவலர் இளமதி, பணியாளர்கள் பூபதி, பெருமாள், வசந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து மாலை வைகையாற்றில் இருந்து கருட வாகனத்தில் சுவாமி புறப்பாடாகி பேட்டை உள்ளிட்ட மண்டகபடிக்கு சென்று அருள்பாலித்தார். நாளை (மே.6) இரவு இரட்டை அக்ரஹாரத்தில் உள்ள கிருஷ்ணன் கோயில் முன்பு யாதவர்கள் சங்கத்தின் சார்பில் தசாவதாரம் நடைபெறும். நாளை (மே.7) இரவு சனீஸ்வரன் கோயிலில் இருந்து பூப்பல்லக்கில் சுவாமி எழுந்தருளி வீதியுலா சென்று கோயிலை அடைகிறார். செயல் அலுவலர் சுதா, கணக்கர் முரளிதரன், பணியாளர்கள் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.