பதிவு செய்த நாள்
12
மே
2023
11:05
பழநி: பழநி, போகர் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள புலிப்பாணி பாத்திர சுவாமிகள் பக்தர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பழநி, போகர் ஜெயந்தி விழா நடத்த உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்துள்ளதை தொடர்ந்து பழநி, போகர் ஆதீனம், புலிப்பாணி பாத்திர சுவாமிகள் விழாவில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து புலிப்பாணி பாத்திர சுவாமிகள் கூறுகையில்,"தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் தர்மம் வெல்லும், என்பதைப் போல சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, போகர் ஜெயந்தி விழாவை நடத்த அனுமதி அளித்துள்ளது. இது பழநியாண்டவர் அருளும், போகர் புலிப்பாணி அவர்களின் பேராற்றலினாலும் நடைபெற்றுள்ளது.
மே.18 ல், போகர் ஜெயந்தி விழா, உச்சிக்கால பூஜை நேரத்தில், புவனேஸ்வரி அம்மன், மரகதலிங்கம் ஆகியவற்றுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாதாரணை நடைபெறும். புலிப்பாணி ஆசிரமத்தில் அன்னதானம் வழங்கப்படும். பக்தர்கள் அனைவரும் இதில் கலந்துகொண்டு இறைவனின் அருளையும், சித்தர்களின் பேராற்றலையும் பெற வேண்டும். இந்நிகழ்ச்சி நடைபெற உதவிய தமிழக அரசு, நீதித்துறை, காவல்துறை, வருவாய்த்துறை, செய்தியாளர்கள், எங்களது வழக்கறிஞர் குழுவினர் அனைவருக்கும் பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரும் விழாவில் கலந்து கொள்ள இதனை அழைப்பாக ஏற்கவேண்டும்." என்றார்.