உத்தரகோசமங்கை, உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் பின்புறம் கண்மாய் கரையில் பழமை வாய்ந்த கோவிந்த பெருமாள் கோயில் உள்ளது.
மதுரை சித்திரை திருவிழா நிறைவுக்கு பிறகு கோயிலுக்கு கள்ளழகர் இருப்பு நிலைக்கு சென்றடைவார். அதனை முன்னிட்டு உத்தரகோசமங்கை கோவிந்த பெருமாள் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் தலுகை விழா நடப்பது வழக்கம். உத்தரகோசமங்கை கண்மாய் கரையில் கோவிந்த பெருமாள் கோயில் உள்ளது. தற்பொழுது பெய்த கோடை மழையால் கண்மாய் நிரம்பி காணப்படுகிறது. அதனால் பக்தர்கள் கரைப்பகுதியில் அமைக்கப்பட்ட குடிலில் கோவிந்த பெருமாளின் திருநாமத்திற்கும், தண்ட கம்புக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்டனர். முன்னதாக மூலவர் கோவிந்த பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், வட மாலை சாற்றும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை 7:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை பெரிய அண்டாக்களில் உணவு சமைக்கும் நிகழ்வு நடந்தது. மாலை 6:00 மணி முதல் இரவு 12:00 மணி வரை 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உணவருந்தும் வகையில் தொடர் அன்னதானம் நடந்தது.
சுற்றுலா மாளிகையின் அருகே அமைக்கப்பட்ட பந்தலில் பெரிய அளவில் சாதம் வடிக்கப்பட்டு ஓலைப்பாயில் கொட்டப்பட்டு மண்வெட்டியால் கிளறி பக்தர்களுக்கு சாதம் பரிமாறப்பட்டது. கோயில் விழா குழுவினர் கூறியதாவது; கடந்த 140 ஆண்டுகளாக எங்களது முன்னோர்கள் மூலம் பல தலைமுறைகளாக தலுகை விழா கொண்டாடி வருகிறோம். சித்திரை திருவிழாவின் நிறைவாக பத்தாயிரம் பேருக்கு மேல் அன்னதானம் வழங்குகிறோம். விவசாயத்தில் சேறு உதவுவது மண்வெட்டி ஆகும். அதனை நினைவுபடுத்துவதற்காக சோறு கிளறுவதற்கு மண்வெட்டியை பயன்படுத்துகிறோம். மண்வெட்டியை மூலவரின் அருகே வைத்து சிறப்பு பூஜைக்கு பின் பயன்படுத்துகிறோம் என்றனர். ஏற்பாடுகளை உத்தரகோசமங்கை யாதவர் தெரு பொதுமக்கள் செய்திருந்தனர்.