திருக்கோஷ்டியூர்: திருப்புத்தூர் அருகே அரளிகோட்டை கோசியப்ப அய்யனார் கோவில் புரவி எடுப்பு விழாவில் கிராமத்தினருடன் அமைச்சரும் உற்சாகமாக பங்கேற்றார்.
இப்பகுதி கிராமங்களில் அய்யனார் கோயிலுக்கு புரவி எடுப்பு விழா சிறப்பாக கொண்டாடப்படும். நீர்நிலை சார்ந்து இருக்கும் சுவாமிக்கு மக்கள் மழை வேண்டியும் விவசாயம் செழிக்கவும் இத்திருவிழா கொண்டாடப்படுகிறது. அரளிக்கோட்டையில் புரவி எடுப்பை முன்னிட்டு சேங்கை வெட்டி பிடிமண் கொடுத்து குதிரைகள் செய்யப்பட்டன. நேற்று முன்தினம் குதிரைகள் செய்ப்பட்ட இடத்திலிருந்து கிராமத்தினர்கள் எடுத்து வந்து புரவிப் பொட்டலில் சேர்த்தனர். தொடர்ந்து புரவிகளுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. நேற்று மாலை புரவிகள் புறப்படாகி கோயிலுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டனர். கிராமத்தினர் மண் குதிரைகள் வடிவில் புரவி பதுமைகளை தங்கள் தோளில் சுமந்து வந்து தங்கள் நேர்த்திக் கடனை நிறைவேற்றினர். கோயிலில் புரவிகள் சேர்க்கப்பட்டு சுவாமிக்கும், புரவிக்கும் சிறப்பு தீபாராதனை நடந்தது. அமைச்சர் பெரியகருப்பன் சொந்த ஊர் என்பதால் அவரும் கிராமத்தினருடன் சேர்ந்து உற்சாகமாக விழாவில் பங்கேற்றார். ஏற்பாடுகளை அரளிகோட்டை கிராமத்தினர் மற்றும் கோசியப்ப அய்யனார் இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்தனர்.