Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மதுரைக்காஞ்சி பகுதி-1 மதுரைக்காஞ்சி பகுதி-1
முதல் பக்கம் » மதுரைக்காஞ்சி
மதுரைக்காஞ்சி நூல் அறிமுகம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

27 செப்
2012
01:09

சங்கத் தமிழ் பாடல் தொகுப்பான பத்துப்பாட்டு என்னும் தொகுப்பில் அடங்குவது மதுரைக் காஞ்சி. இத்தொகுப்பில் உள்ள நூல்களுள் மிகவும் நீளமானது இதுவே. மாங்குடி மருதனார் என்னும் புலவர் இந்நூலை இயற்றியுள்ளார். இப்பாடலில் 782 அடிகள் உள்ளன. பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனுக்கு உலகியல் உணர்த்துவதாய் இப்பாடல் பாடப்பட்டுள்ளது. பாண்டி நாட்டின் தலைநகரமான மதுரையின் அழகையும், வளத்தையும் கூறுகின்ற இந்நூல், அந்நாட்டின் ஐவகை நிலங்களைப் பற்றியும் கூறுகின்றது. இப்பாட்டின் தொடக்கத்தில் தி‌ரைகடல் சூழ்ந்த ஞாலம் பற்றிப் பாடும் புலவர் பிறகு தேன் கூடுகள் நிறைந்திருக்கும் மலையுச்சிகளைப் பற்றியும் கூறுகிறார். இந்த உவமைகள் இயற்கை வளம் குறித்துப் பாடும் பொருட்டு அமைந்தவை அல்ல. வாழ்க்கை அலை போன்று நிலையில்லாதது. எனவே நல்லறங்கள் செய்து மலை போல் என்றும் அழியாப் புகழைத் ‌தேடிக்கொள் என்று மன்னனுக்கு மறைமுகமாய்க் கூறுகிறார்.

நூலாசிரியர் மாங்குடி மருதனார் வரலாறு: பண்டைநாள் தண்டமிழ் இலக்கியங்களில் தலைசிறந்து விளங்கும் பத்துப்பாட்டின்கண், ஆறாவது எண்ணுமுறைக்கண் நின்ற மதுரைக்காஞ்சி என்னும் இன்சுவைப் பனுவலை இயற்றியவர் மாங்குடி மருதனார் என்னும் நல்லிசைப் புலவராவார். மாங்குடி கிழார், மதுரைக்காஞ்சிப் புலவன், காஞ்சிப்புலவன் என்னும் பெயர்களாலும் இவர் வழங்கப்படுகின்றனர். இவர் வேளாண் மரபினர் என்ப. மாங்குடிகிழார் என்பதன்கண் கிழார் என்னும் வேளாண் மரபிற்குரிய பெயருண்மை அவர் அம்மரபினர் என்றற்குச் சான்றாம். இவர் இயற்றிய மதுரைக்காஞ்சியினாதல், பிற பனுவல்களினாதல் இன்ன சமயத்தினர் இவர் எனத் துணிதற்குச் சான்றுகளில்லை. மதுரைக்காஞ்சியில் சைவ சமயம், பவுத்த சமயம், அமண் சமயம் முதலிய சமயங்களை இவர் கூறுமிடத்தும் தாம் எச்சமயச் சார்புடையார் என்பது தோன்றாததொரு பொது நிலையினின்று அவையிற்றைச் சமனிலையிலேயே நன்கு மதித்து ஓதுகின்றார். ஆதலின் இவர் வள்ளுவர் போன்றும், இளங்கோவடிகள் போன்றும், எல்லாச் சமயங்களையும் வீடுபேற்றிற்குச் சிறந்த படிவழிகள் என்றே மதித்துப் போற்றும் சமயங்கடந்த ஒரு பொது நிலையுற்ற சான்றோர் எனக் கொள்ளல் வேண்டும்.

மதுரைக்காஞ்சியில், மழுவாள் நெடியோன் தலைவனாக, மாசற விளங்கிய யாக்கையர், சூழ்சுடர் வாடாப்பூவின் இமையா நாட்டத்து, நாற்ற வுணவின் உருகெழு பெரியோர்க்கு எனப் பாராட்டி யிருத்தலான், இவர் சைவசமயத்தவர் என்பது அறியப்படும் என்பாரும் உளர். இங்ஙனமே இப்புலவர் பெருமான் சென்ற காலமும் வரூஉ மமயமும், இன்றிவட்டோன்றிய ஒழுக்கமொடு நன்குணர்ந்து, வானும் நிலனுந் தாமுழுதுணரும், சான்ற கொள்கைச் சாயா யாக்கை ஆன்றடங்கு அறிஞர் எனச் சமணசமயத்துத் துறவிகளைப் பாராட்டும் போதும், ஒருகால் இவரும் சமணரோ என எண்ண இடந்தருதல் காண்க.

மாங்குடி மருதனார் சிறந்த சமயங்கள் அனைத்திற்கும் உள்ளீடாய், உயிராய் அமைந்த சீரிய கொள்கையாகிய ஒன்றனையே மேற்கொண்டவர் ஆவார். அதுதான் யாதோ எனின், அற்றது பற்றெனின் உற்றது வீடு என்னும், எச்சமயத்தார்க்கும் பொதுவாகிய ஒரு மெய்க்கொள்கையே யாகும். இப்புலவர்பெருமான் நூலை ஓதுவார், இவர், வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவர் என்பதனையும் உணர்ந்து கொள்ளக்கூடும்.

பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் அவையகத்தே வீற்றிருந்த நல்லிசைப் புலவர்களினும், இவர் தலைசிறந்து விளங்கியவர் என்பதனை, அம்மன்னர் பெருமான் ஓதிய வஞ்சினக் காஞ்சித்துறைபற்றிய மறப்பாடலின்கண்,

ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவனாக
உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பிற்
புலவர்

எனவரும் அடிகள் நன்கு விளக்கும். இவ்வடிகள் தாமே, அம்மன்னர் பெருமான் இந்நல்லிசைப் புலவர்பாற் கொண்டுள்ள நன்மதிப்பையும் விளக்குதல் காண்க. பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனும் மன்னனாகும் பெருமையுடையானாதல் கிடக்கச் சிறந்த நல்லிசைப் புலவனுமாவான் என்பதனை, அவன் ஓதிய இவ்வஞ்சினக் காஞ்சியே நமக்கு விளக்கும். ஒருகால் மாங்குடி மருதனார் இம் மன்னர் பெருமானுக்கு நல்லாசிரியராய்த் திகழ்ந்து அவன் புலமையை வளர்த்தவருமாகலாம், என எண்ணவும் இடனுளது. இக் கருத்தை வலியுறுத்தப் பிற சான்றுகளும் உள்ளன.

காஞ்சி பாடுதற்குற்ற காரணம்: நெடுஞ்செழியன் இளமையில் மாங்குடி மருதனாரின் உடனுறைவாற் புலமை உள்ளம் நிறையப் பெற்றவனாய்ப் பனுவல் யாக்கும் திறம் படைத்தான். அவ் விளமையிற்றானே அவன் அரசு கட்டிலேறினான். அங்ஙனம் இளமையில் அரசுகட்டில் ஏறியதற்குக் காரணம், அவன்றந்தை அக்காலத்தே மாய்ந்தான் என்பது போலும். புலவரோடு உடனுறைந்து புலமையுள்ளம் முதிர்வதன் முன்னரே அரசுகட்டி லேறினான் செழியன். அவன் இளமையானும் வேறு பிற காரணங்களானும் அப்போதே அவனுக்குப் பல்வேறு பகைகள் கிளர்ந்தெழுந்தன. தலையில் அரசமுடி சூட்டியவுடன் கையில் வில்லேந்திப் போர்க்களம் புக வேண்டிய நிலை செழியனுக்கு இயற்கையின் நிகழலாயிற்று. இக் காலந்தொடங்கி நெடுஞ்செழியன் போர்ச்செயலில் ஈடுபட்டு ஊக்கத்தோடு உலகெலாம் வியக்கும்படி போரின்மேற் போர் வெற்றியின்மேல் வெற்றியாக எய்தி அத்துறையில் ஒப்பின்றித் திகழ்வானாயினன்.

இவன் காலத்து நல்லிசைப்புலவர் பலரும் இவன் போர்த்திறத்தையும் புகழையும் பலபடப் பாரித்து ஓதினர். இப்புலவர்களில், சிறந்த புலவராகிய மாங்குடி மருதனார் ஏனைப் புலவர்போன்று இவன் வெற்றியையும் வீரத்தையும் கண்டு மகிழ்ந்தனரேனும், அத் துறையின்கண் அவன் அளவின் விஞ்சி வெற்றியே! புகழே! என்னும் பற்றுள்ளத்தோடே மேன் மேலும் உழலுதல் கண்டு தம் முள்ளத்தூடே நொந்தனர். இளமையில் அறிவுத்துறைபற்றி வளர்ந்த இவன் உள்ளம் இவ்வாறு இப் போர்த்துறையில் ஆழ்ந்து மீளாவகை புதையலாயிற்றே! என வருந்திச் செவ்வி போந்தபோதெல்லாம் செழியனின் மறத்துறைப் போக்கை இடித்துரைகளால் தகைத்தே வரலாயினர். செழியனை மீண்டும் அறிவுத்துறையில் ஈடுபடுத்தச் செய்த முயற்சியின் பயனே இம் மதுரைக்காஞ்சி என அறிதல் வேண்டும். மன்னரைச் சார்ந்தொழுகுதல் மிக்க பெருமைதரும் செயலே எனினும், அச்செயலின்கட் சிறு தவறு நேர்ந்த விடத்தும் அது மிக்க இன்னலையே விளைவித்துவிடும். இதனை,

கொளப்பட்டே மென்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர்  (குறள் - 699)

என்றும்,

பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும்  (குறள் - 700)

என்றும்,

இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற
ஒளியோ டொழுகப் படும்  (குறள் - 698)

என்றும்,

அகலா தணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்  (691)

என்றும் எழுந்த தமிழ்மறையான் உணரலாம்.

மன்னன்பால் பேரன்புடைய மாங்குடி மருதனார் ஏனைய புலவர் போலன்றி அவன் மிகுதியை இடித்துரைத்து மாற்றி மீண்டும் நன்னெறிக்கண் செலுத்தும் பொருட்டுக் குறிப்பறிந்து காலங்கருதி வேண்டுப வேட்பச் சொல்லும் செவ்வியை நோக்கி அமைதியோடிருந்தார். அத்தகைய தொரு செவ்வியும் நேர்ந்தது. அச் செவ்வியிலே தம் கருத்தினைச் செழியனுக்கு அறிவுறுத்தத் தொடங்கி, அவன் குறிப்பறிந்து, அவன் வேட்கும் ஆறறிந்து, இம் மதுரைக்காஞ்சியை அறிவுறுத்துவாராயினர். இம் மதுரைக்காஞ்சியின்கண் அம் மன்னன் வேட்கும் சிறப்புக்களையே புகழ்வார் போன்று பாடிய பகுதிகளே மிக்கிருக்கின்றன. எனினும் தம் கருத்தாகிய நிலையாமை யுணர்த்து தலையே யாண்டும் குறிப்பாகப் புலப்படுத்தியுள்ள இவர் வித்தகம் உன்னி உன்னி மகிழற்பாற்று. தெய்வப்புலமைத் திருவள்ளுவனார் திருக்குறளின்கண் நீத்தார் பெருமை கூறுமிடத்து,

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவற் றுணிவு  (குறள் - 21)

என்ற அருமைத் திருக்குறளின் கருத்தையே இப்புலவர் பெருமான் பாண்டியனுக்கு விளக்கமாகச் செவியறிவுறுத்தார். இவர் செவியறிவுறுத்த முறையை உரைப்பாயிரத்துக் காட்டுதும் : ஆண்டுக் காண்க. இவ்வாற்றால் இப் புலவர்பெருமான் செழியனுக்கு ஞானாசிரியனுமாக விளங்கினார். இத் துறைபற்றி இவர் இச் செழியனுக்கு அறிவுறுத்த பனுவல் ஒன்று புறநானூற்றில் உளது. அஃது இம் மதுரைக்காஞ்சியின் சுருக்கமாகத் திகழ்கின்றது. (புறம் - 24)

பண்டைநாளில் தமிழ் வேந்தர் ஆட்சிக்கீழ்த் தமிழ் மக்கள் அமைந்து வாழ்ந்த சிறப்பினை இற்றை நாள் யாம் அறிதற்குச் சிறந்த சான்றாகத் திகழ்வனவற்றுள் இம் மதுரைக்காஞ்சி தலை சிறந்ததாக இருக்கின்றது. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் ஆட்சிக்கீழ் அமைந்த அம் மதுரையின் அழகை - ஆண்டு வாழ்ந்த மக்களின் ஒழுக்க முதலியவற்றை, இன்று நம் முன்னர்க் கண்கூடாகக் காட்டும் ஒரு தெய்வத் தீம்பாடலே மதுரைக்காஞ்சி. நிலையாமை பாடிய மாங்குடி மருதனார் நிலையில்லாத காலத்தையும், அக் காலத்தே நிகழ்ந்த நிகழ்ச்சிகளையும் உலகம் உள்ள காலமெல்லாம் நிலைத்து நிற்கச் செய்ததொரு தெய்விக வித்தையே மதுரைக்காஞ்சி.

நெடுஞ்செழியன் போர்புரிவதில் ஒப்புயர்வற்று விளங்கினான், என்னில் புலவர்பெருமான் மாங்குடி மருதனார் அப்போரைப் பாடுவதில் ஒப்புயர்வற்று விளங்குகின்றார். இவர் ஒரு சில அடிகளிலே நம் கண்முன்னர் அச்சமிக்க போர்க்களம் ஒன்றனை ஆக்கிவிடுகின்ற திறத்தை,

விழுச்சூழிய விளங்கோ டைய
கடுஞ்சினத்த கமழ் கடாஅத்து
அளறுபட்ட நறுஞ்சென்னிய
வரைமருளும் உயர்தோன்றல
வினைநவின்ற பேர்யானை
சினஞ்சிறந்து களனுழக்கவும்
மாவெடுத்த மலிகுரூஉத்துகள்
அகல்வானத்து வெயில்கரப்பவும்
வாம்பரிய கடுந்திண்டேர்
காற்றென்னக் கடிதுகொட்பவும்
வாண்மிகு மறமைந்தர்
தோண்முறையான் வீறுமுற்றவும்

எனவரும் அடிகளால் ஓதியுணர்க. தொல்காப்பியத்தில் புறத்திணைபற்றி எழுந்த போர்த்துறைகளுக்கு இவர் பாடிய மதுரைக்காஞ்சி எடுத்துக் காட்டுக்கள் பல உடைத்து. செய்யுளின்பம் செறிய இவர் யாத்துள்ள மதுரைக்காஞ்சியின் பெருமை எம்மால் எடுத்துரைக்கும் எளிமைத்தன்று. இம் மதுரைக் காஞ்சியேயன்றி நற்றிணையில் 2-ம், குறுந்தொகையில் 3-ம், அகநானூற்றில் 1-ம், புறநானூற்றில் 6-ம், திருவள்ளுவ மாலையில் 1-ம், இவர் இயற்றிய பனுவல்கள் உள்ளன. இவர் காலத்துப் புலவர்கள் குடபுலவியனார், கல்லாடனார், இடைக்குன்றூர்க் கிழார், நக்கீரர் முதலியோராவர்.

பாட்டுடைத் தலைவன் வரலாறு:  தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்!

மதுரைக்காஞ்சி என்னும் இவ்வாடாத தண்டமிழ்ப் பூந்தொடையல் சூட்டப்பெற்ற மன்னர் பெருமான் தலையாலங் கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் ஆவான். பாண்டிய மன்னரில் நெடுஞ்செழியன் என்ற பெயருடையார் பிறரும் உளர்; அவர், ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன், அரசு கட்டிலிற் றுஞ்சிய நெடுஞ்செழியன் என வெவ்வேறு அடைமொழிகளுடன் வழங்கப்படுவர். தலையாலங்கானம் என்னுமிடத்தே முடிவேந்தர் இருவரும் வேளிராகிய குறுநில மன்னர் ஐவரும் ஆகிய ஏழு மன்னர்களையும், தனது கன்னிப் போரில் இம் மன்னன் உலகம் வியக்க வென்று வாகை புனைந்த சிறப்புப்பற்றித் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என வழங்கப்பட்டான்.

இம் மன்னர் பெருமான் பால்மணமாறாத இளமைப் பருவத்திலேயே அரசு கட்டில் ஏறுஞ் செவ்வியைப் பெற்றான். இங்ஙனம் இளமையிலேயே அரசுரிமை ஏற்றுக் கோடற்குக் காரணம் இவன் அப்பருவத்திலேயே தன்றந்தையை இழந்தமையே ஆதல் வேண்டும். நெடுஞ்செழியனின் தந்தை இறந்ததும், இவன் மிக இளமைப்பருவத்தே முடி ஏற்றதும், இப் பாண்டியர்பால் பழம்பகையொடு இவர்க்கு அடங்கிக்கிடந்த மன்னர் பலருக்கும் தம் பழம் பகைமை தீர்த்துப் பாண்டி நாட்டைக் கைப்பற்றற்குரிய நல்ல செவ்வியாகத் தோன்றியதனால், இளைதாக முள் மரங் கொல்க என்னும் முறைபற்றி அப்பகை வேந்தர் பலரும் ஒருங்கு திரண்டு நெடுஞ்செழியனை அழித்துப் பாண்டி நாட்டைக் கைபற்றப் படைகொண்டு புறப்பட்டனர். நெடுஞ்செழியன் மறத் தெய்வமாகிய கொற்றவையின் திருவருள் மிகப் பெற்றவன் போலும்; அவ் விளம்பருவத்தேயே ஒரு சிறிதும் அஞ்சாது,

நகுதக் கனரே நாடுமீக் கூறுநர்
இளைய னிவனென வுளையக் கூறிப்
படுமணி இரட்டும் பாவடிப் பணைத்தோள்
நெடுநல் யானையும் தேரும் மாவும்
படையமை மறவரும் உடையம் யாமென்(று)
உறுதுப் பஞ்சாது உடல் சினஞ் செருக்கிச்
சிறுசொற் சொல்லிய சினங்கெழு வேந்தரை
அருஞ்சமஞ் சிதையத் தாக்கி முரசமொ(டு)
ஒருங்ககப் படேஎ னாயிற் பொருந்திய
என்னிழல் வாழ்நர் சென்னிழற் காணாது
கொடியனெம் மிறையெனக் கண்ணீர் பரப்பிக்
குடிபழி தூற்றும் கோலே னாகுக
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவ னாக
உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பிற்
புலவர் பாடாது வரைகவென் னிலவரை
புரப்போர் புன்கண் கூர
இரப்போர்க் கீயா இன்மையா னுறவே  (புறம் - 72)

என்னும் - என்றென்றும் அழியாத - வஞ்சினங் கூறி அப்பகை மன்னரை எதிர்த்துக், காலென்னக் கடிதுராஅய் நாடு கெட எரிபரப்பி ஆலங்கானத்து அஞ்சுவரப் போரில் கொன்று, அவர் முரசு கொண்டு தன் வஞ்சின முற்றுவித்தான். அத் தலையாலங் கானத்துப் போரில் இவனை எதிர்த்து மாண்ட மன்னர் சோழன், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேண்மான், பொருநன், என்பவர் ஆவர். அப் போரிலேயே கோச்சேரமான் யானைக் கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறை என்னும் சேர மன்னன் சிறைப்படுத்தப்பட்டான்.

மிக்க இளைஞனாயிருந்தும் முடிவேந்தர் இருவரையும், வேளிர் ஐவரையும் ஒருதானாகி எதிர்த்து வென்று நூழிலாட்டிய மறப்பெருமையை அக்காலத்தே உலகம் பெரிதும் வியப்பதாயிற்று. இவ்வெற்றியை நல்லிசைப் புலவர் பலரும் பாராட்டிப் பாடினர். அப்பாடல்கள் புறநானூற்றில் மிளிர்கின்றன. அவையிற்றுள், செழியனின் மறச்சிறப்பை நேரிற்கண்ட இடைக் குன்றூர் கிழார் என்னும் புலவர் பெருமான் அவன் இளம் பருவத்தையும் அப் பருவத்திற் கேலாத பெரிய மறச் செயலையும் வியப்பாராய் ஒருவனை ஒருவன் கொல்லுதலும், ஒருவற் கொருவன் தோற்றலும் புதிதன்று; அஃது இவ்வுலகத்தின் கண்ணே தொன்று தொட்டு நிகழும் இயல்பேயாம்; வேம்பினது பெரிய கொம்பின் கண் உண்டாகிய ஒள்ளிய தளிரை உழிஞைக் கொடியுடனே செறியத் தொடுத்த தேன்மிக்க மாலையை வளைய மாலையுடனே சிறப்பச் சூடி, ஓசையினிய தெளிந்த போர்ப்பறை ஒலிப்பக் காட்சிதக, நாடுபொருந்திய செல்வத்தினையுடைய பசும் பொன்னாற் செய்த பூணையுமுடைய செழியனின் பெருமையும் உயர்ந்த தலைமையும் உணராதவராய், தம்மிற் கூடிப் பொருதுமென்று தன்னிடத்து வந்த இருபெரு வேந்தரும் ஐம்பெரு வேளிருமாகிய ஏழரசருடைய நல்ல வென்றி அடங்கும்படி தான் ஒருவனாய் நின்று போர் செய்து கொல்லுதலாகிய அதிசயத்தை இன்று யாம் கண்கூடாகக் காண்டலே அன்றி இதற்குமுன் இத்தகைய நிகழ்ச்சியைக் கேட்டும் அறிந்திலோம், என்றும்.

இத்தகைய வியத்தகு போரை யாற்றிய நெடுஞ்செழியனோ, இப்போது தான் குழந்தைப் பருவத்திற்கிட்ட கிண்கிணி களையப் பெற்றான். உடனே அக்கால்களிலே மறவர்க்குரிய வீரக் கழலைக் கட்டினான். அணித்தே குடுமி களையப்பட்ட தனது சென்னியில் வேம்பையும் உழிஞையையும் உடனே சூடினான். சிறுவர்க்குரிய குறுந்தொடி கழிக்கப்பட்ட சிறு கையில் உடனே வில்லை ஏந்தினான். குழந்தைப் பருவத்திற்கிட்ட ஐம்படைத்தாலி இன்னும் அவன் மார்பிலே திகழ்கின்றது. பாலுணவை ஒழித்து இன்று தான் உணவும் உண்டான்; அப்பால்மண மாறாத வாயினையுடைய இளைஞனோ இன்று இப்போர்க்களத்தே கொடுஞ்சித் தேர் பொலிய நிற்கின்றவன்! இத்துணைச் சிறுவன் முறை முறையாகத் தன்மேல் மண்டி வருகின்ற புதிய வீரரை மதித்தலும் இலன்! அவமதித்ததும் இலன்! அவரை இறுகப்பிடித்து விண்ணில் ஒலியெழும்படி கவிழ்ந்து உடலம் நிலத்தின்கண்ணே பொருந்தக் கொன்றதற்கு மகிழ்ந்ததும் இலன்! இவ்வருஞ் செயல் செய்தோமே எனத் தன்னை மிகுத்தல் அதனினும் இலன்!! என்றும் வரும் கருத்தமையப் பாடிய பாடல்கள் அம் மன்னனின் மறச் சிறப்பை முழுதும் உணரப் போதிய சான்றாம்.

நகுதக்கனரே என்றெடுத்துக் காட்டிய பாடல் ஒன்றே இம் மன்னர் பெருமான் புலவர் பெருமானாகத் திகழ்ந்தான் என்பதை உணர்த்தும். மேலும் புரவலர் பெருமானாகவும் இவன் திகழ்ந்தான். இம் மன்னனின் மாண்பு முழுதும் மதுரைக்காஞ்சியையும் புறத்தின் கண்ணுள்ளனவாய் இவனைப்பற்றி எழுந்த பாடல்களையும் ஓதி உணர்தல் வேண்டுமன்றி ஈண்டு விரித்தற் கியலாது. இளம்பருவத்தே போரிற்புக்க இந்நெடுஞ்செழியன் நாளடைவில் இந்நாவலந்தீவு முழுதும் தன்னடிப்படுத்துவான் ஆனான். தொட்டிற் பழக்கம் சுடுகாடுமட்டும் என்ற பழமொழிக்கேற்ப இவன் மேலும் மேலும் போர்த்துறையில் பெரிதும் ஊக்கமும் பொருட்பற்றும் உடையனாய் உழலுதல் கண்டு இவன்பாற் பேரன்புடைய புலவர் பெருமான் இம் மன்னனுக்கு நிலையாமை யுணர்த்தி வீடு பேறு எய்துவிக்க விழைந்து அதற்குரிய காலமும் செவ்வியும் தேர்ந்து இம் மதுரைக் காஞ்சி யென்னும் பனுவல் மாலையை யாத்துச் சூட்டிப் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் போன்று அறக்கள வேள்வி செய்வானாய், நிலந்தரு திருவிற் பாண்டியன் போன்று மெய்யுணர் வித்தகனாய்,

இலங்கிழை மகளிர் பொலங்கலத் தேந்திய
மணங்கமழ் தேறல் மடுப்ப நாளும்
மகிழ்ந்தினிது உறைமதி

இங்ஙனமின்றி, நில்லாதவற்றை நிலையின என்றுணரும் புல்லறிவாண்மை கடை என அறிதி! எனக் காஞ்சியறிவுறுத்தி, அந்தமிலின்பத்து அழியாவீட்டிற்கு நெறிப்படுத்தினர் என்ப. இப் பத்துப் பாட்டினுள் இம் மதுரைக்காஞ்சியே அன்றி நெடுநல்வாடை கொண்டவனும் இவ் வேந்தர் பெருமானே ஆவான்.

அறிமுகம்

மதுரைக் காஞ்சி என்னும் இத்தீஞ்சுவைப் பனுவலின் சொற்பொருள் இன்பங்களிற் றோய்ந்த உள்ளமுடைய பிற்றை நாட் சான்றோர் ஒருவர் அப்பனுவலைப் புகழ்வாராய்,

சொல்லென்னும் பூம்போது தோற்றிப் பொருளென்னும்
நல்லிருந் தீந்தாது நாறுதலான் - மல்லிகையின்
வண்டார் கமழ்தாமம் அன்றே மலையாத
தண்டாரான் கூடற் றமிழ்

என்னும் அருமையான வெண்பா ஒன்றனை அப்பனுவலுக்குட் பாயிரமாக யாத்தமைத்துள்ளார். சுருக்கமாகவும் தெளிவாகவும் உண்மையாகவும், இவ்வெண்பா மதுரைக் காஞ்சியின் அருமை பெருமைகளை நன்கு விளக்கும். சங்கம் நிறீஇ மொழி வளர்த்த பாண்டிய மன்னர்களின் நற்செயலின் விளைவே அன்றோ இத்தகைய இன்சுவைப் பனுவல்; எனவே இறப்ப இன்பம் நல்கும் இத்தமிழைத் தண்டாரான் கூடற்றமிழ் என்று மனமுவந்து இப்புலவர் பாராட்டுதல் மிகவும் பொருத்தமேயாகும். மதுரைக்காஞ்சியின்கண் அமைந்த வீறுடைய தீந் தமிழ்ச் சொல் ஒவ்வொன்றும் அழகியதும், வாடாததும், இன்பமிக்கதும் பரியதுமாகிய ஒவ்வொரு தெய்வத்தன்மை யுடைய மாமலர். மற்று அம்மலரில் உள்ளீடாய்த் ததும்பிச் சொட்டும் தேனே அதன்கட் பொருள் என்னும் இதற்குமேல் யாரே இம்மதுரைக் காஞ்சியின் சிறப்பை எடுத்தோத வல்லார்?

மரந்தின்னூஉ வரையுதிர்க்கும்
நரையுருமின் ஏறனையை  (மதுரைக் - 62-3)

என்றும்,

காலென்னக் கடிதுராஅய்
நாடுகெட எரிபரப்பி
ஆலங் கானத்து அஞ்சுவரவிறுத்
தரசுபட அமருழக்கி
முரசுகொண்டு களம்வேட்ட
அடுதிறலுயர் புகழ்வேந்தே  (þ 125-29)

என்றும்,

நட்டவர் குடியுயர்க்குவை
செற்றவர் அரசு பெயர்க்குவை

என்றும்,

பொய்யறியா வாய்மொழியாற்
புகழ்நிறைந்த நன்மாந்தரொடு (மதுரைக் 19-20)

என்றும்,

ஆடுற்ற வூன்சோறு
நெறியறிந்த கடிவாலுவன்
அடியொதுங்கிப் பிற்பெயரா
படையோர்க்கு முருகயர  (þ 35-8)

என்றும் வரும் மதுரைக் காஞ்சியின் அடிகள் சிலவற்றை எடுத்துக்காட்டி ஆ! இவ்வடிகள் தாம் ஓதுங்கால் எத்துணை இன்பந்தருகின்றன! நீயிரும் இவையிற்றைப் பன்முறையும் ஓதி ஓதி இன்புறுமின் என யாம் சுட்டிக் காட்டுவதல்லால் இவ்வடி இதனால் இத்தகைய இன்பமுடைத்தென ஏதுக்காட்டுவே மல்லோம். ஏனெனில் நல்லிசைப் புலவர்கள் இயற்றிய செய்யுள்கள் அனைத்தும் சொற்களால் இயன்றனவே எனினும் அவை தரும் இன்பமோ சொன்னலம் கடந்த சிறப்பிற்றாமாதலின்.

காண்பார் கண்கவரும் கவினுடைய மல்லிகைமலர் போன்ற இச்சொற்கள் அம்மலரின்கண் மணம் போன்ற தனித் தமிழ் மணமும் சாலவுடையன. இத் தீஞ்சொன்மலர் மாலை, தமிழ்ச் சான்றோர் அகம் புறம் என வகுத்த பொருட்பகுதியில் புறப் பொருட்பகுதி முழுதும் தன்பாற் றோனாகத் ததும்பப் பெற்றது. வெட்சித்திணை முதல் பாடாண்திணை இறுதியாகத் தொல்காப்பியத்தில் வரையரை செய்யப்பட்ட ஏழு திணைப் பொருளும் மதுரைக் காஞ்சியில் எஞ்சாது கூறப்பட்டுள்ளன. ஆதலின் இப்பனுவல் புறத்திணைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றது எனலாம். எனினும் அவ்வேழுதிணையுள்ளும் காஞ்சித்திணைப் பொருளை அறிவுறுத்தலே இப்பனுவலின் நோக்கமாகும் சிறப்புப் பற்றி இது மதுரைக் காஞ்சி எனக் காஞ்சித்திணைப் பெயரால் வழங்கப்படுகின்றது.

காஞ்சித்திணை

இனி, மாந்தர்க்கு உறுதி என உயர்ந்தோரான் எடுக்கப்பட்ட அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நாற்பொருள்களில் வீடென்பது சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்தாகலின் காரணவகையாற் கூறப்படுவதல்லது இலக்கண வகையாற் கூறப்படாமையால் (பரிலேழகர் திருக். உரைப்பாயிரம்.)

காஞ்சித்திணை - அவ்வீட்டினைக் காரணவகையாற் கூறும் பகுதியாகும். என்னை?

காஞ்சி தானே (பெருந்திணைப்புறனே) (தொல்-புறத்-22)
பாங்கருஞ் சிறப்பிற் பல்லாற் றானும்
நில்லா வுலகம் புல்லிய நெறித்தே  (தொல்-புறத் - 23)

என்பது தொல்காப்பியத்தே காஞ்சித்திணைக்குக் கூறிய இலக்கணமாம். இதன் பொருள் :-

காஞ்சித்திணையாவது, தனக்குத் துணையில்லாத வீட்டின்பம் ஏதுவாக, அறம் பொருள் இன்பமாகிய பொருட் பகுதியானும், அவற்றுப் பகுதியாகிய உயிரும் யாக்கையும் செல்வமும் இளமையும் முதலியவற்றானும் நிலைபேறில்லாத உலகியற்கையைப் பொருந்திய நன்னெறியினை உடைத்தாம் என்பது. எனவே வீடுபேறு நிமித்தமாகப் பல்வேறு நிலையாமையைச் சான்றோர் சாற்றுங் குறிப்பினது காஞ்சி என்ப.

அறம் பொருள் இன்பம் என்னும் மூன்றும் வீடுபேற்றிற்கு ஏதுவாயினாற் போன்று, வெட்சி முதலிய ஆறு திணைகளும் காஞ்சித்திணைக்கு ஏதுவாம். காஞ்சித்திணை ஒன்றே ஏனைத்திணைப் பொருள்களினும் சிறந்ததாம். மறுமை யறியாதது பிறப்பன்று; மக்கள் வாழ்க்கையின் நோக்கம் வீடுபெறுதல் ஒன்றே ஆதல் வேண்டும். வீடுபேற்றிற்குக் காரணம் யான் எனது என்னும் இருவகைச் செருக்கும் அறுதல்; செருக்கறு திக்குக் காரணமாவது மெய்யுணர்வு பிறத்தல்; மெய்யுணர்வு பிறத்தற்குக் காரணம் அழிதன் மாலையவாகிய இம்மை மறுமை இன்பங்களின் உவர்ப்பும் வீடுபேற்றின்கண் ஆசையுமாம். இவ்வுவர்ப்புத்தானும் உண்டாதற்குக் காரணமாவது பற்றுதற்குரிய பொருளாகிய உடல்பொருள்களின் நிலையாமை உணர்ச்சி கைவரப் பெறுதலே ஆகலின், செந்தமிழ்ச்சான்றோர் நிலையாமை யுணர்த்தலாகிய இக்காஞ்சித் திணையையே வீடுபேற்றிற்கு நிமித்தமாகக் கொண்டு கூறுவாராயினர் என்க. இவ்வாற்றால் இக்காஞ்சியே ஏனைத்திணைகளினும் சிறப்புடைத்தாதலும் காண்க.

மதுரைக்காஞ்சி: மதுரைக்காஞ்சி என்னும் தொடரை மதுரையிடத்து அரசற்குக் கூறிய காஞ்சி என விரிப்பர் ஆசிரியர் நச்சினார்க்கினியர். காஞ்சித் திணைபற்றிய எல்லாப் பனுவலும் ஒவ்வோரிடத்திருந்து கூறப்பட்டனவே யாகும். அவை கூறப்பட்ட இடங்களை அடைமொழியாகக் கொண்டு வழங்கப்படுதலை யாம் காண்கின்றிலம். மேலும் இம் மதுரைக்காஞ்சியில் பாண்டியர் தலைநகரமாகிய மதுரையைப் பற்றியே பெரிதும் பாடப்பட்டிருத்தலையும் காண்கிறோம். ஒருகால் மதுரையைப் பாடுமாற்றான் உணர்த்திய காஞ்சி என இத்தொடர் விரிக்கப்படுதல் மிகவும் பொருந்துவதாம் என்று எமக்குத் தோன்றுகின்றது. மதுரைக் காஞ்சியின் வரலாறும் இதற்கு அரண் செய்வதாம். அது வருமாறு:

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் மிக இளம்பருவத்திலேயே அரசு கட்டில் ஏறினான் என்றும், அவ்வமயம் அவன் பகைவர் பலர் அவனை அழித்து அவன் அரசியலைக் கைப்பற்ற எண்ணிக் கிளர்ந்தெழுந்தனர் என்றும் நெடுஞ்செழியன் வரலாற்றிற் கூறினாம். அவ்வமயம் புலமையுள்ளும் படைத்த நெடுஞ்செழியன் கூறிய நகுதக்கனரே நாடுமீக் கூறுநர் என்று தொடங்கி ஓதிய வஞ்சினப் பாடலே (புறம் - 72) இம் மதுரைக் காஞ்சியின் தாய் ஆகும்; அப்பாட்டின்கண்,

ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவ னாக
உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பிற்
புலவர் பாடாது வரைகவென் னிலவரை

என, அம் மன்னன் ஓதிய அடிகள் அதனைக் கேட்டுக் கொண்டிருந்த மாங்குடி மருதனார் உளத்தே பெரிதும் பதியலாயின. அப்போது அவர் தமக்குள் இளஞ்சிறானே; இறையருளால் உன்னுடைய பகைவரை அருஞ்சமஞ் சிதையத் தாக்கி முரசமொடு ஒருங்கு அகப்படுத்து நின் அரிய வஞ்சினத்தை முற்றுவிக்கக்கடவாய்; நீ உன் வஞ்சினம் முற்றியவழி ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி மாங்குடிமருதன் என உன்னால் உயர்த்தோதப்பட்ட இப்புலவன் நின்னிலவரையைப் பலர் புகழ்சிறப்பில் உலகமொடு நிலைஇய பனுவலால் பாடுவன், இஃதுறுதி எனச் சொல்லிக் கொண்டனர் ஆதல் வேண்டும்.

இளைஞனாயினும் நெடுஞ்செழியன் வஞ்சினங் கூறியவாறே அச் சிறுசொற் சொல்லிய சினங்கெழு வேந்தரை, அருஞ்சமம் சிதையத் தாக்கி முரசமொடு ஒருங்கு அகப்படுத்து நூழிலாட்டித் தன் வஞ்சினம் முற்றுவித்தான். இனி மாங்குடி மருதனார் அவன் நிலவரையைப் பாடியே தீர்தல் வேண்டும். இவ் வெற்றியை இடைக் குன்றூர்க்கிழார் முதலிய நல்லிசைப் புலவர் பலர் நெஞ்சாரப் புகழ்ந்து பாடினர். மருதனார் உடனே பாடினாரில்லை, ஏன்?

வெற்றிமகள் ஆலங்கானத்துப் போரில் நெடுஞ்செழியனுக்கு வெற்றியலங்கல் சூடிய நாள் தொடங்கி மேலும் மேலும் போர்க்களம் பற்பல காட்டி அவனை வரவேற்று வாகைசூட்டி மகிழ்ந்தாள். போருக்குப்பின் போர்! வெற்றியின்மேல் வெற்றி! தொடர்ந்து கன்னிமுத லிமயம்வரைப் போராற்றித் தன்னடிப்படுத்தான். இந் நிகழ்ச்சிக்கிடையில் அவனையும் அவன் நிலவரையையும் பாடப் புலவர்க்குச் செவ்வி கிடைத்திலது. கூடலில் விளைந்த தண்டமிழ் மல்லிகைமாலையை மன்னனுக்குச் சூட்டி மகிழ யாண்டுகள் பல காத்திருந்தனர். இதற்கிடையே நினைத்தவுடனே செய்யுள் யாக்கும் வன்மையுடைய அம் முதுபுலவரின் கலையுளத்தே யாண்டுகள் பல கிடந்து மதுரைக்காஞ்சி சொல்லின்பம் பொருளின்பங்களான் மிகமிக முதிர்ந்து வரலாயிற்று. இவ்வாற்றால் வைகல் எண்டேர் செய்யும் தச்சன் திங்கள் வலித்த கால் போன்று இம்மதுரைக் காஞ்சி பெரிதும் திண்ணிதாயிற்று.

ஏனை மன்னர் போலாது அறிவுத்துறையினும் நல்லிசைப் புலவனாகத் திகழ்ந்து விளங்கிய செழியனுக்குச் சூடும் சொற்பூந்தொடையலில் காஞ்சிப்பொருளே தேனாக அமைவதாக எனப் புலவர் பெருமான் தேர்ந்து கொண்டனர். மக்கள் வாழ்க்கை எத்துணைச் சிறப்புடையதாயினும் அவர் மெய்யுணர்ந்து வாழாத பொழுது அதனாற் பயன் என்னாம்! எல்லாச் சிறப்பானும் சிறந்து விளங்கும் நம் செழியன் மெய்யுணர்ச்சியோடு மருவி வாழக்கடவன் எனக் கருதி மருதனார் காஞ்சிப் பொருளை அறிவுறுத்தலை மதுரையைப் பாடிய பனுவலின் உயிராக அமைத்துக் கொண்டார். ஆகவே இப் பனுவற்கு மதுரைக்காஞ்சி எனப் பெயர் குறித்தனர் என்க.

இனி அந்தணராக, அரசனாகுக, வணிகனாகுக, வேளாளனாகுக, வேறு யாரேனுமாகுக, எத்தகைய நிலையினும் நிலையாமை யுணர்ந்து பற்றறுதி எய்துமாற்றால் வாழ்வோர் எல்லாம் வீடு பேறடைவர் என்பது தமிழ்ச்சான்றோர் கொள்கையாம். ஆதலால், நெடுஞ்செழியனே! இவையெல்லாம் நிலையாத பொருள்கள் கண்டாய். இவையிற்றால் யாதுபயன்! இவற்றை இன்னே விட்டொழி; காட்டிற்கு ஓடிவிடு; ஆண்டுக் கண்மூடி மௌனியாயிரு! என மாங்குடி மருதனார் இப்பனுவலில் ஓதினாரில்லை; திருவள்ளுவனார் நீத்தார் பெருமை ஓதுமிடத்து,

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவற் றுணிவு  (குறள் - 21)

என்னும் அருமைத் திருக்குறட் கருத்தையே தம்முள்ளத்தே கொண்டு, அரசர் பெருமானே! நீ உயர்ந்தோர் மருகன்! நெடியோன் உம்பல்! வெல்கோ! புகல்வேந்து! ஏறனையை! குருசில்! பழிநமக்கு எழுக என்னாய்! வாய்நட்பினை! அனையை யாதலின் நின்னை முன்னிலைப்படுத்து யான் உரைக்கற் பாலதென்னை? ஆயினும், நிலைபேறில்லாத இவையிற்றை நிலையுடைப் பொருளாக மயங்கி மெய்யுணர்வின்றிப் பிறப்பற முயலாது பயனின்றி மாண்டார் மணலினும் பலர் ஆதலான், நீ அவர்போலாது இவையிற்றின் நிலையாமை கண்டு படிமத்தை அதிட்டித்த முருகன்போன்று அரசர்கரசனா யிருந்தேயும் பற்றற்றவனாய் நின் பிறப்பிற்கேற்ற அறத்தின் ஒழுகி நிலந்தரு திருவிற் பாண்டியன் போன்று மெய்யுணர்ச்சியோடே மயக்கமில்லாதவனாய்,

பொற்பு விளங்கு புகழவை நிற்புகழ்ந் தேத்த
இலங்கிழை மகளிர் பொலங்கலத் தேந்திய
மணங்கமழ் தேறன் மடுப்ப நாளும்
மகிழ்ந்தினிது உறைமதி பெரும!

என இனிதின் அறிவுறுப்பாராயினர். இவ்வறிவுரை,

நாடுகளிற் புக்குழன்றும் காடுகளிற் சரித்தும்
நாகமுழை புக்கிருந்தும் தாகமுதற் றவிர்ந்தும்
நீடுபல காலங்கள் நித்தரா யிருந்தும்
நின்மலஞா னத்தையில்லார் நிகழ்ந்திடுவர் பிறப்பின்
ஏடுதரு மலர்க்குழலார் முலைத்தலைக்கே இடைக்கே
எறிவிழியின் படுகடைக்கே கிடந்தும் இறை ஞானம்
கூடுமவர் கூடரிய வீடுங் கூடிக்
குஞ்சித்த சேவடியும் கும்பிட்டே இருப்பர்  (சிவஞான-சுபக்.செ. 308)

என்னும் ஆன்றோர் மெய்ம்மொழியை நினைவூட்டுகின்றது. இம் மதுரைக்காஞ்சி பத்துப்பாட்டினுள் அடிப் பெருமையுடைய பெரும் பாட்டாகத் திகழ்கின்றது. பெருகு வளமதுரைக் காஞ்சி என்றது இஃது அடிகளான் ஏனைப் பாட்டுக்களினும் பெருகியதாதலைக் கருதியே கூறப்பட்டதாதல் வேண்டும். மாந்தரின் மனவியல்புணர்ந்த மாங்குடி மருதனார் இந்நெடிய பாட்டினை ஓதுவோர் உணர்வு சலியாமைப்பொருட்டு இனிய வஞ்சியடிகளையும் ஆசிரிய வடிகளையும் விரவி இப் பாடலை யாத்துள்ளனர். இம் மதுரைக்காஞ்சி 782 அடிகளை உடைத்து.

 
மேலும் மதுரைக்காஞ்சி »
temple news

மதுரைக்காஞ்சி பகுதி-1 செப்டம்பர் 27,2012

பத்துப் பாட்டுக்களில் ஆறாவதான மதுரைக்காஞ்சி, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை ... மேலும்
 

மதுரைக்காஞ்சி பகுதி-2 செப்டம்பர் 27,2012

வெறிகொண்ட களிற்றியானை 375-383 : பனைமீன் ................. யானையும் பொருள் : பனை மீன் வழங்கும் வளைமேய் பரப்பின் - பனை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar