பதிவு செய்த நாள்
22
மே
2023
03:05
துாத்துக்குடி: துாத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் கோடைக்கால இந்து சமய பண்பாட்டு வகுப்புகள், கடந்த 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடந்தது. பள்ளி, மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். துாத்துக்குடி பாகம்பரியாள் அம்பாள் உடனுறை சங்கரராமேஸ்வரர் கோயிலில் நிறைவுவிழா நடந்தது. இதனை முன்னிட்டு நடந்த மாணவ, மாணவிகளின் ரதவீதி உலா வருதலை, தொழிலதிபர் செந்தில் ஆறுமுகம் துவக்கி வைத்தார். சிவபெருமான், முருகன், ராதை, கண்ணன், சுவாமி விவேகானந்தர் வேடமிட்டு ஆடி வீதிகள் வழியாக வந்த ஊர்வலம் மீண்டும் கோயிலில் முடிந்தது. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவிற்கு, சேவாபாரதி அமைப்பின் மாவட்ட தலைவர் காளிராஜ் வரவேற்றார். இந்து சமய பண்பாட்டு வகுப்புகள் தலைவர் தர்மராஜ் தலைமை வகித்தார். சேவாபாரதி மாநில செயலாளர் வெண்ணிமாலை, மாவட்ட செயலாளர் பாபா குருக்கள் முன்னிலை வகித்தனர். செங்கோல் ஆதீனம் சிவப்பிரகாச தேசிக சத்திய ஞானபரமாச்சார்ய சுவாமிகள் ஆசி வழங்கினார். ராஷ்ட்ரீய சேவாபாரதி அறங்காவலர் பானுமதி சிறப்புரை ஆற்றினார். சவுந்தரராஜன் மகிழ்ச்சி உரை ஆற்றினார்.