பதிவு செய்த நாள்
24
மே
2023
05:05
பெரம்பலுார், கங்கைகொண்ட சோழபுரம் மாளிகைமேட்டில் தொல்லியல் துறை மூலம் கடந்த 2020 2021ம் ஆண்டுக்கான அகழாய்வு பணிகள் தமிழகத்தில் கீழடி, ஆதிச்சநல்லுார், கங்கைகொண்ட சோழபுரம் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் உள்ள பகுதிகளில் தொடங்கியது. இதில், அரியலுார் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் அருகே உட்கோட்டை கிராமத்தில் உள்ள சோழ பேரரசான முதலாம் ராஜேந்திர சோழன் மற்றும் அவருக்கு பின்னால் ஆண்ட சோழ மன்னர்களின் அரண்மனை இருந்ததாக கூறப்படும் மாளிகைமேடு பகுதியில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதற்கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கி நடந்தது. அப்போது, கூரை ஓடுகள், சிகப்பு மற்றும் கருப்பு நிற ஓடுகள், இரும்பு ஆணிகள், சீன கலை நயமிக்க மணிகள், பானை விளிம்புகள், சிறிய அளவிலான அரிய பொருட்கள், கட்டிடங்கள் இருந்ததற்கான எச்சங்கள் கிடைத்தன. முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட அரண்மனையின் ஒரு பாகத்தின் சுற்றுசுவர் பின்னர் அரண்மனையின் தொடர்ச்சியாக இரண்டாவது பாகமும் கண்டறியப்பட்டது. வடிகால் அமைப்பு போன்ற சுவர் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகளை கடந்த பிப்ரவரி 11ம் தேதி வீடியோ கான்பரன்ஸ் மூலம் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இரண்டாம் கட்ட அகழாய்வின்போது அரண்மனையின் சுற்றுச்சுவர், இரும்பிலான ஆணிகள், மண்பாண்ட விளிம்புகள், 4.9 மில்லி மீட்டர் நீளம் அதன் நடுவில் அமைந்துள்ள கடினமான பகுதி அளவு நாலு மில்லி மீட்டர் என்ற அளவில் 7.920 கிராம் எடை கொண்ட தங்கத்திளான காப்பு ஒன்று கிடைத்தது. தற்போது மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியை உடையார்பாளையம் ஆர்.டி.ஓ., பரிமளம் கடந்த 6ம் தேதி தொடங்கி வைத்தார். இந்த அகழாய்வானது செப்டம்பர் மாத இறுதிவரை நடக்க உள்ளது. இந்நிலையில் நேற்று மீண்டும் வாய்க்கால் போன்ற அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிழக்குமேற்காக 315 சென்டிமீட்டர் நீளமும் 45 சென்டிமீட்டர் அகலமும் உள்ளது. மீண்டும் தோண்ட தோண்ட இதனுடைய நீளம் தெரியக்கூடும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.