பதிவு செய்த நாள்
31
மே
2023
09:05
வடபழநி: வடபழநி ஆண்டவர் கோவில் வைகாசி விசாக தேரோட்டம், வெகு விமரிசையாக நடைபெற்றது.
சென்னை, வடபழநி ஆண்டவர் கோவிலில், வைகாசி விசாக பிரம்மோற்சவமும், விடையாற்றி பெருவிழாவும் விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு வைகாசி விசாகப் பெருவிழா, இம்மாதம் 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஜூன் 3ம் தேதி வரை வைகாசி விசாகப் பெருவிழாவும், ஜூன் 4ம் தேதி முதல் 13ம் தேதி வரை, விடையாற்றி திருவிழாவும் நடைபெற உள்ளன.திருவிழாவின் முக்கியநிகழ்வான தேரோட்டம்,நேற்று காலை 7:45 மணிக்கு துவங்கியது. கோவிலைச் சுற்றியுள்ள மாட வீதிகள், பழநி ஆண்டவர் கோவில் தெரு, தெற்கு பெருமாள் கோவில் தெரு, ஆற்காடு சாலை, 100 அடி சாலை உள்ளிட்ட பிரதான சாலைகள் வழியாகச் சென்று, காலை 11:00 மணிக்கு, திருத்தேர் நிலைக்கு வந்தது. வள்ளி, தெய்வானை சமேதராக, முருகப் பெருமான் திருத்தேரில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள், அரோஹரா கோஷத்துடன் தேர் வடம் பிடித்தனர். பக்தர்கள் சிரமப்படாமல் இருக்க, கோவில் நிர்வாகம் சார்பில் சாலையில் தண்ணீர் தெளிக்கப்பட்டது. மோர் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டன. அதன் பின், இரவு 7:00 மணிக்கு, ஓய்யாளி உற்சவம் நடைபெற்றது. இதையடுத்து, வரும் ஜூன் மாதம் 2ம் தேதி மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. மேலும், 3ம் தேதி இரவு 7:00 மணிக்கு, புஷ்ப பல்லக்கு வீதியுலா புறப்பாடும் நடைபெற உள்ளது.