பதிவு செய்த நாள்
07
ஜூன்
2023
03:06
போடி: தென் திருவண்ணாமலை எனப் போற்றப்படும் போடி பரமசிவன் கோயில் கும்பாபிஷேகம் வரும் ஜன., நடக்க உள்ள நிலையில் இன்று விமான பாலாலயம், சிவனுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.
போடி பரமசிவன் கோயில் கும்பாபிஷேகம் நடந்து முடிந்து 15 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் வரும் ஜன., மாதம் மகா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. இதனையொட்டி இன்று விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோம பூஜையுடன் விமான பாலாலய பூஜை நடந்தது. தக்கார் மாரிமுத்து தலைமை வகித்தார். பரமசிவன் கோயில் அன்னதான அறக்கட்டளை தலைவர் வடமலை ராஜைய பாண்டியன் முன்னிலை வகித்தார். கோயில் ஆய்வாளர் கார்த்திகேயன், கணக்கர் பழனியப்பன், நகராட்சி தலைவர் ராஜராஜேஸ்வரி, தி.மு.க., தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச் செல்வன், நகர செயலாளர் புருஷோத்தமன், நகராட்சி முன்னாள் துணைத்தலைவர் சங்கர், சிங்காரவேலன் பழனி பாதயாத்திரை குழு குருநாதர் சுருளிவேல், அர்ச்சகர் சோமஸ்கந்த குருக்கள் உட்பட பலர் பங்கேற்றனர். கோயில் கும்பாபிஷேத்தையொட்டி ரூ.10 லட்சம் செலவில் பரமசிவன் கோயில், வளாகத்தில் உள்ள சிவன் கோயில், முருகன் கோயில், லட்சுமி நாராயணன் கோயில் சன்னதிகளின் மராமத்து பணிகள், வளாக பகுதியில் கல்பாவுதல் உள்ளிட்ட பணிகள் துவங்கப்பட உள்ளது.