அறங்காவலர்களாக அரசியல்வாதிகளை நியமிப்பது முற்றிலும் தவறானது; கூனம்பட்டி ஆதீனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூன் 2023 03:06
அவிநாசி: ஹிந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள தொன்மையான கோவில்களில் அறங்காவலர்களாக அரசியல்வாதிகளை நியமிப்பதை நிறுத்தும்படியும் கோவில் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் வழங்குவதை உறுதி செய்யும் வகையில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது பற்றி கூனம்பட்டி ஆதீனம் நடராஜ ஸ்வாமிகள் கூறியதாவது; மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பார்கள் அந்த பழமொழிக்கேற்ப உயர் நீதிமன்றம் கொடுத்துள்ள தீர்ப்பு அந்த ஆண்டவனே கொடுத்ததாகும்.நாம் மிகவும் வரவேற்கின்றோம்.யார் யார் எந்தெந்த துறையில் அவர்களுக்கான பதவியில் வேலை செய்ய வேண்டுமோ அவரவர் அந்தந்த துறையில் மட்டுமே இருக்க வேண்டும்.அதன்படி மின்சாரத் துறையில் பணிபுரிபவர்களிடம் அறநிலையத்துறையும், அறநிலையத்துறையில் பணிபுரிபவர்களிடம் விவசாயத் துறையை கொடுப்பதால் நிர்வாகம் எப்படி சிறப்படையும் அந்தந்த துறையில் உள்ளவர்கள் அவரவர்களுக்கான வேலைகளை செவ்வனே செய்தால் தான் நிர்வாகத்தை சிறப்பாக மாற்ற முடியும்.இப்படிப்பட்ட சூழ்நிலையில் அரசியல்வாதிகள் எவ்வாறு அறநிலையத்துறையில் அறங்காவலர்களாக நியமிப்பது. இந்த செயல் மிகவும் வருந்ததக்கது.கோவில்கள் என்பது மிகவும் புனிதமான வழிபாட்டுத்தலுக்குரிய தலம். அப்படிப்பட்ட கோவிலை இன்று ஒரு தனியார் நிறுவனம் போல நடத்துவது மிகவும் கண்டிக்கத்தக்க செயலாகும்.ஒரு தனியார் நிறுவனத்தில் அதிகாரிக்கு எப்படி ஊழியர்கள் கீழ்ப்படிந்து வேலைகளை செய்து வருகிறார்களோ அதுபோல இன்று அறநிலையத்துறையில் உள்ள அதிகாரிகளுக்கு கீழ் சிவாச்சாரியார்களும் தீட்சிதர்களும் பயந்து கொண்டு தங்களுடைய வேலைகளை செய்து வருகிறார்கள்.இறைவனுக்கும் கூட பயப்படுவதில்லை ஆனால் அறநிலைய துறை அதிகாரிகளை கண்டு மிகவும் அச்சத்தில் உள்ளார்கள் சிவாச்சாரியார்கள்.அரசியல்வாதிகள் அறங்காவலர்களாக கோவில்களை நிர்வாகிப்பது அறவே தடுக்க வேண்டும் அதற்கான வழி இப்போது பிறந்துள்ளது இது ஆண்டவனாக அளித்த தீர்ப்பு.கோவில்களை புனிதமாகவும் தெய்வ பக்தியுடன் வழிபட்டு வரும் ஆன்மீகவாதிகளை அறங்காவலர்களாக நியமிக்க வேண்டும்.கோவிலில் உள்ள ஊழியர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் தர உத்தரவு பிறப்பித்துள்ளதும் மிக சந்தோசம் அடைய வரவேற்கத்தக்க தீர்ப்பாகும். அறநிலையத்துறையின் கீழ் உள்ள அதிகாரிகள் ஆகம விசயத்தில் தலையிடுவது மிகவும் வருத்தத்தக்க செயலாகும். ஆகமங்கள் என்பது வேதங்களுக்கு கட்டுப்பட்டு செய்யக் கூடியதாகும் அதைப்பற்றி அதிகாரிகளுக்கு தெரியாது.ஆகமங்களையும் பூஜைகள் வழிமுறைகளையும் தெரிந்து கொள்ளலாமே தவிர அதனை எவ்வாறு செய்ய வேண்டும் என கட்டாயப்படுத்துவது முற்றிலும் தவறான செயலாகும். இதனை அதிகாரிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும். சிவாகம் என்று சொல்லப்படுவது இறைவனால் படைக்கப்பட்டதாகும். இன்று உள்ள கோவில்கள் அனைத்தும் சிவாகம் முறையில் தான் வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.28 ஆகமங்கள் உள்ளது. அதன்படி தான் பூஜைகள் நடத்த வேண்டும்.உயர் நீதிமன்றம் ஒரு நல்ல தீர்ப்பை வழங்கி விட வேண்டும் என்றார்.