அன்னூர்: அன்னூர் அருகே கோவில் சிலைகளை சேதப்படுத்தியவர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். அன்னூர் அருகே மூலக் குரும்பபாளையத்தில் 150 ஆண்டுகள் பழமையான அண்ணன்மார் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று முன்தினம் இரவு அமாவாசை பூஜையை முடித்துவிட்டு கோவிலை பூட்டி விட்டு சென்றனர். நேற்று காலை 6:00 மணிக்கு சென்று பார்த்தபோது கோவிலில் ஏழு வேல்கள் வளைக்கப்பட்டிருந்தன. இரண்டு நாக சர்ப்ப சிலைகள், சாம்புகன் சிலை சேதப்படுத்தப்பட்டிருந்தன. காலனியில் உள்ள பட்டத்தரசி அம்மன் கோவிலிலும் மூன்று வேல்கள் மற்றும் ஒரு சிலை சேதப்படுத்தப்பட்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பூசாரி சண்முகம் அளித்த புகாரின் பேரில் அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். அதே ஊரை சேர்ந்த தற்போது வேறு மதத்திற்கு மாறிய சுரேஷ், 39. என்பவர் கோவில்பாளையம் தனியார் மருத்துவமனையில் நெஞ்சுவலி என்று கூறி சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார். இன்ஸ்பெக்டர் நித்யா தலைமையிலான போலீசார் அவரிடம் விசாரிக்கின்றனர்.