பதிவு செய்த நாள்
20
ஜூன்
2023
12:06
புரி : ஒடிசா மாநிலம் பூரியில் ரத யாத்திரை கோலாகலமாக நடைபெற்றது. இந்த ரத யாத்திரையில் கலந்து கொள்வதற்காக, லட்சக்கணக்கான மக்கள் புரியில் குவிந்தனர்.
ஒடிசா மாநிலம், புரியில் உள்ள ஜகன்னாதர் கோவில் கி.பி., 11ம் நூற்றாண்டில், தமிழகத்தை ஆண்ட முதலாம் குலோத்துங்க சோழனின் உறவினர், அனந்தவர்மன் சோடகங்க தேவன் என்பவனால் கட்டப்பட்டது. இக்கோவிலில், ஜகன்னாதர் என்ற கிருஷ்ணர், அவரது மூத்த சகோதரர் பலராமர், இவர்களின் சகோதரி சுபத்திரை ஆகிய மூன்று பேருக்கும் நடக்கும் ரத யாத்திரை உலகப் புகழ் பெற்றது. இந்தாண்டுக்கான ரத யாத்திரை இன்று நடைபெற்றது. இந்த ரத யாத்திரையில் கலந்து கொள்வதற்காக, லட்சக்கணக்கான மக்கள் புரியில் குவிந்த வண்ணம் உள்ளனர். காலை 9 மணிக்கு முன் ஜெகநாதர், பலபத்ரா, சுபத்ரா, சுதர்சன சிலைகள் தேர்களில் நிறுவப்பட்டு பின்னர் மங்கள ஆரத்தி செய்யப்பட்டது. மதியம் ஒரு மணியளவில், பூரியின் அரசர் கஜபதி திவ்யசிங் தேவ், தேர்களின் முன் தங்க துடைப்பம் கொண்டு துடைத்தல் செய்து வழிபட்டார். தொடர்ந்து சிறப்பு வழிபாடுகளுக்கு பின் மாலை 6 மணிக்கு 3 தேர்கள் வடம்பிடித்து இழுக்கப்பட்டது. ஒவ்வொரு தேரைச் சுற்றியும் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். இதுதவிர, புரி நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.