சிதம்பரம் அருகே கோவில் கதவு பூட்டை உடைத்து சிலைகள் திருட்டு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜூன் 2023 04:06
சிதம்பரம்: சிதம்பரம் அருகே சுப்ரமணிய கோவிலின் பூட்டை உடைத்து 3 சிலைகளை திருடி சென்ற மர்ம நபர்களை மோப்ப நாய் வரவழைத்து, போலீசார் தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் சரகத்திற்குட்பட்ட கவரப்பட்டு அருகே உள்ளது வடுக தெரு மேடு. இக்கிராமத்தில் சுப்ரமணியசுவாமி கோவில் உள்ளது. பாரம்பரியமான இக்கோவிலில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் சிலர் கோவிலின் வெளி கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். கோவிலுக்குள் இருந்த உற்சவர் சிலைகளான, இரண்டடி உயரமுள்ள முருகர் சிலை, ஒன்னரை அடி உயரமுள்ள வள்ளி, தெய்வானை ஆகிய 3 சிலைகள் மற்றும் ஒரு திருவாச்சியை திருடி சென்றுள்ளனர். இதன் மதிப்பு சுமார் 1.5 லட்சம் வரை இருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த சிதம்பரம் ஏ.எஸ்.பி. ரகுபதி, அண்ணாமலை நகர் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் டைமன் துரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதனை தொடர்ந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. மோப்ப நாய் அந்த பகுதியில் இருந்து சுமார் ஒன்னரை கிலோ மீட்டர் துாரம் உள்ள சித்தலாப்பாடி வரை சென்று நின்றது. சிலையை திருடிய குற்றவாளிகள் அந்த வழியாக தப்பி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து அண்ணாமலை நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் அப்பகுதியை சேர்ந்தவர் என்பதால் அவரும் கோவிலுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். அதிஷ்டவசமாக கோவிலில் இருந்த தங்க வேல் தப்பித்தது என பக்தர்கள் ஆதங்கத்தோடு தெரிவித்தனர். நேற்று முன்தினம் இரவு தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததால், மக்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்ததால், மர்ம நபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.