திருச்சுழி பூமிநாதன் கோவிலின் வடக்கு புறத்தில் உள்ள ஊர்க்காவலன் தெருவில் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர்கள் விஜயராகவன், ராஜபாண்டி கள ஆய்வு செய்தனர். அங்கே 1 அடி அகலமும், ஒன்றரை அடி உயரமும் கொண்ட 10 ம் நூற்றாண்டை சேர்ந்த சிற்பம் ஒன்றை கண்டறிந்தனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது : முற்காலத்தில் அரசர்கள் தமது பகைவர்களோடு போர் தொடுக்க செல்லும்போது தன்னுடைய மன்னனின் வெற்றிக்காக அந்நாட்டு படை வீரர்களில் ஒருவன் தன் தலையை தானே அறுத்து தன் உயிரை பலி கொடுக்கும் வழக்கம் இருந்துள்ளது. இது போன்ற உயிர் துறத்தலை அபி பலி என்று . இந்த செய்திகள் சங்க இலக்கியங்களான தொல்காப்பியம், மணிமேகலை, கலிங்கத்துப்பரணி, சிலப்பதிகாரம் நூல்களில் உள்ளது. சங்க இலக்கியம் காலம் தொட்டு அபி பலி போன்ற மரபு காணப்பெற்றாலும், 9 ம் நூற்றாண்டு முதல் 13 ம் நூற்றாண்டு வரை இந்த மரபு உச்சம் பெற்றது. திருச்சுழியில் கண்டறியப்பட்ட நவகண்ட சிலையானது தலைமுடி கொண்டையாகவும், காதுகளில் காதணி அணிந்த நிலையிலும், முகம் மழுங்கிய நிலையில், தன்னுடைய வலது கையில் தனது கழுத்தின் வலப்பக்கத்தில் இருந்து இடப்பக்கமாக கத்தியை கொண்டு குத்தியபடியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த சிற்பத்தை மக்கள் கருப்பசாமியாக வழிபட்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் நவகண்ட சிற்பங்கள் 2 இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஒன்று குலசேகர நல்லூரில் நூற்றாண்டு நாயக்கர் கால நவகண்ட சிற்பம் ஆகும். மற்றொன்று ராஜபாளையம் முறம்பு அருகே வாழவந்தாள்புரத்தில் 15 ம் நூற்றாண்டை சார்ந்த நவகண்ட சிற்பம் ஆகும். கிபி பத்தாம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த முற்கால பாண்டியர்களை காலத்தினை சார்ந்தது இந்த சிற்பம் என்பதால் இது சிறப்பு வாய்ந்த சிற்பமாக கருதப்படுகிறது, என்றனர்.