பதிவு செய்த நாள்
21
ஜூன்
2023
05:06
குன்னூர்: வெலிங்டன் ஐயப்பன் கோவிலில், சபரிமலை தந்திரி தலைமையில் கும்பாபிஷேக திருவிழா விமரிசையாக நடந்தது.
நீலகிரி மாவட்டம், குன்னூர் ஊட்டி சாலை, வெலிங்டனில் அமைந்துள்ள ஐயப்பன் கோவில், 1967ம் ஆண்டு, சபரிமலை தந்திரி மறைந்த மகேஸ்வரரு தந்திரியால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தற்போது மீண்டும் கோவில் சீரமைக்கப்பட்டு கடந்த 19ம் தேதி, கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. ஆச்சார்யா வர்ணம், புண்ணியாகம், சுத்தி கிரியைகள், ரக்ஷோக்ன ஹோமம், வாஸ்து ஹோமம், வாஸ்து கலசம், வாஸ்து பலி, அத்தாழ பூஜை, சதுர்சுத்தி தாரா, பஞ்சகவ்யம், பஞ்சகம், 25 கலச பூஜை, பகவத் சேவை உள்ளிட்டவை நடந்தன. இன்று காலை 6 மணிக்கு அஷ்டதிரவிய மகா கணபதி ஹோமம், கலசத்திங்கள் அதிவாசம் விடர்த்தி, உஷ பூஜை, பானி தானம், அஷ்டபந்தனை மருந்து சாத்துதல், கலசாபிஷேகம் நடந்தன. காலை 9:30 மணிக்கு, உபதேவதா கலசங்கள் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள், அன்னதானம் நடந்தன. மாலை 4 மணிக்கு செண்டை மேளம் முழங்க ஐயப்பன் திருவீதி ஊர்வலம் நடந்தது. பாலக்காடு மாங்குரிசி உன்னிமாரார் குழுவினரின் உடுக்கை பாட்டுடன், ஷோபான சங்கீதம் இடம்பெற்றது. சபரிமலை பரம்பரை தலைமை குருக்கள் கண்டரு மோகனரு தந்திரி தலைமையில் பூஜைகள் நடத்தினார். ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் பக்தர்கள் செய்தனர்.