பதிவு செய்த நாள்
24
ஜூன்
2023
03:06
தொண்டாமுத்தூர்: கோவையில், அகில பாரதீய சந்நியாசிகள் சங்கம் மற்றும் நொய்யல் அறக்கட்டளை சார்பில் நடக்கவுள்ள நொய்யல் பெருவிழாவையொட்டி, நொய்யல் பாதுகாப்பு ரத யாத்திரை, ஈஷா ஆதியோகியில் இருந்து துவங்கியது.
அகில பாரதீய சந்நியாசிகள் சங்கம் சார்பில், நொய்யல் ஆற்றை பாதுகாக்கும் வகையில், நொய்யல் பெருவிழா 2023 என்ற நிகழ்ச்சி, கோவை, பேரூரில், ஆக., 25ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடக்கிறது. இதுகுறித்து, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், நொய்யல் ஆற்றங்கரையையொட்டி உள்ள பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நொய்யல் பாதுகாப்பு ரத யாத்திரை, துவக்க விழா நேற்று நடந்தது. இதனையடுத்து, நேற்று காலை, நொய்யலின் பிறப்பிடமான சாடிவயலில் இருந்து சன்னியாசிகள் புனிதநீர் எடுத்து, சின்மயா ஆசிரமத்திற்கு சென்றனர். தொடர்ந்து, நொய்யல் ரத யாத்திரைக்கு, பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில் பூஜை செய்தனர். அதன்தொடர்ச்சியாக, நொய்யல் பாதுகாப்பு ரத யாத்திரை துவக்க விழா, ஈஷாவில் உள்ள ஆதியோகி முன் நேற்று மாலை நடந்தது. இந்நிகழ்ச்சியின் துவக்கமாக, 500க்கும் மேற்பட்ட பெண்கள், வள்ளி கும்மியாட்டம் ஆடினர். தொடர்ந்து, ஈஷா சம்ஸ்கிருதி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு, பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார் தலைமை வகித்து தலைமை உரையாற்றினார். மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில்,"பாரத பிரதமர் மோடி, கங்கை ஆற்றை தூர்வாரி பெரும் பணியை செய்துள்ளார். அதோடு, கோவில்களையும் புனரமைத்துள்ளார். கங்கை, தெய்வீகம் கொண்டுள்ளது. பாரத நாட்டில் இருப்பது புண்ணியம். அதுவும், தமிழகத்தில் இருப்பது அதைவிட புண்ணியம். ஈஷாவிற்கு வருவது கோடி புண்ணியம்,"என்றார். அதன்பின், நொய்யல் பாதுகாப்பு விழிப்புணர்வு ரத யாத்திரையை, பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார், கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், பல்வேறு ஆதீனங்கள், சன்னியாசிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார், நிருபர்களிடம் கூறுகையில்,"நொய்யல் ஆற்றின் தற்போதைய நிலை பாழடைந்ததாக இருக்கிறது. அதை மீட்டெடுக்கும் வகையில், நொய்யல் பெருவிழா, ஆகஸ்ட் 25 முதல் 31ம் தேதி வரை நடக்கிறது. அதில், 7 நாட்கள், 12 கருத்தரங்குகள் நடக்கிறது. நொய்யல் ஆற்றில், கழிவுநீர் கலப்பது, பிளாஸ்டிக் கலப்பது, ஆற்றை மாசுபடுத்துவதை தடுப்பது குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சாடிவயலில் புனித நீர் எடுத்து, நொய்யல் ரத யாத்திரை துவங்கியது. இந்த யாத்திரை, நொய்யல் ஆறு, கரூரில் கலக்கும் இடம் வரை, வழியோர கிராம மக்களுக்கு, விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளும்,"என்றார்.