பதிவு செய்த நாள்
25
ஜூன்
2023
10:06
திருப்புவனம்: திருப்புவனம் திதி பொட்டலில் பக்தர்களுக்கு தேவையான எந்த வித அடிப்படை வசதிகளும் செய்யாமல் பணம் மட்டும் வசூலிப்பதால் பொதுமக்கள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர். காசியை விட அதிகம் புண்ணியம் தரும் ஸ்தலம் திருப்புவனம் வைகை ஆற்றங்கரை என இந்துகள் கருதுகின்றனர். திருப்புவனம் வைகை ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து புஷ்பவனேஷ்வரரை வழிபட்டால் பக்தர்களுக்கு நல்லது நடக்கும் என்பது நம்பிக்கை. அமாவாசை மற்றும் விஷேச தினங்களில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள், திதி, தர்ப்பணம் கொடுக்க வருபவர்களிடம் கட்டணம் வசூல் செய்ய சிவகங்கை தேஸ்தானம் சார்பில் ஒப்பந்தகாரர் நியமிக்கப்பட்டுள்ளர். கரும கிரிகை பொட்டலில் ஒரு நபர் கொண்டு வரும் தட்டுக்கு 70 ரூபாய் வரை வசூல் செய்யும் தேவஸ்தானம் வைகை ஆற்றங்கரையில் பக்தர்கள் அமர்வதற்கு சிமெண்ட் தளம் கூட அமைத்து தரவில்லை. திதி கொடுக்கும் பக்தர்கள் நீராட தண்ணீர் வசதி, உடைமாற்ற வசதி, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட எந்த வித வசதிகளும் செய்து தரவில்லை. பேரூராட்சி சார்பில் ஒருசில அடிப்படை வசதிகள் மட்டும் செய்து தரப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக கட்டணம் வசூலிக்கும் தேவஸ்தான நிர்வாகம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.
இலந்தைக்குளம் கருப்புசாமி கூறுகையில் : பல ஆண்டுகளாக தேவஸ்தான நிர்வாகம் பக்தர்களிடம் கட்டணம் வசூலித்து வருகிறது. ஆடி அமாவாசை உள்ளிட்ட தினங்களில் வைகை ஆற்றினுள் கொளுத்தும் வெயிலில் வெறும் கொட்டகை அமைத்து திதி, தர்ப்பணம் வழங்கி வருகின்றனர். கட்டணம் வசூல் செய்யும் தேவஸ்தான நிர்வாகம் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர மறுக்கிறது. கடந்த சில மாதங்களாக வாகனங்களில் வரும் வெளியூர் பக்தர்களிடம் வாகனங்களுக்கு என தனியாக இருபது ரூபாய் வசூலிக்கின்றனர். பேரூராட்சி இடத்தில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு தேவஸ்தான நிர்வாகம் ஒப்பந்தம் கூட கோராமல் எப்படி கட்டணம் வசூலிக்கிறது என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதனை உள்ளாட்சி நிர்வாகமும், வருவாய் துறையினரும் கண்டு கொள்ளவில்லை, வாகனங்களுக்கு பார்கிங் கட்டணம் வசூலிக்கும் நிலையில் வாகனங்களில் உள்ள பொருட்கள் அடிக்கடி மாயமாகி வருகிறது. இதனால் வடக்குரத வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகனங்களுக்கு எந்த வித பாதுகாப்பும் இல்லை. திதி, தர்ப்பணம் வழங்கப்படும் வைகை ஆற்றங்கரை பக்கம் சென்றாலே பார்கிங் கட்டணம் கேட்டு அடாவடி செய்கின்றனர், என்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் வைகை ஆற்றங்கரையில் திதி, தர்ப்பணம் கொடுக்க வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர தேவஸ்தான நிர்வாகத்தை வலியுறுத்த வேண்டும் அல்லது கட்டணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.