பதிவு செய்த நாள்
25
ஜூன்
2023
11:06
சூலூர்: அரசூர் ஸ்ரீ பரமசிவன் கோவில் கும்பாபிஷேக விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
சூலூர் அடுத்த அரசூரில் உள்ள ஸ்ரீ பரமசிவன் மற்றும் கந்தாயி அப்பர் கோவில் பழமையானது. கொங்கு நாட்டில் வேல் வடிவில் அருள்பாலிக்கும், 21 கோவில்களுக்கு தலைமை பீடமாக உள்ள இக்கோவிலில், பழமை மாறாமல் திருப்பணிகள் நடந்தன. பணிகள் முடிந்து, கடந்த, 23 ம்தேதி விநாயகர் பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. சுற்று வட்டார கிராமங்களில் இருந்து முளைப்பாலிகை, தீர்த்தக்குடங்கள் எடுத்து வரப்பட்டன. புனித நீர் கலசங்கள் வைத்து, முதல் கால ஹோமம், பூர்ணாகுதி நடந்தது. நேற்று இரண்டாம் கால ஹோமம் முடிந்து, அஷ்ட பந்தன மருந்து சாத்தப்பட்டது. கோ மாதா பூஜை, கஜ பூஜை, அஸ்வ பூஜை நடந்தது. மாலை மூன்றாம் கால ஹோமம் நடந்தது. இன்று காலை, நான்காம் கால பூஜை முடிந்து, புனித நீர் கலசங்கள் மேள, தாளத்துடன் கோவிலை வலம் வந்தன. 10:00 மணிக்கு, விமானம், கோபுரங்கள், பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, ஸ்ரீ பரமசிவன் மற்றும் கந்தாயி அப்பருக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். தொடர்ந்து மகா அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.