பதிவு செய்த நாள்
03
ஜூலை
2023
11:07
மாதா, பிதா, குரு தெய்வம் என்பார்கள். பிறப்பை கொடுத்த தாய், வளர்த்தெடுக்கும் தந்தை, அறிவை கொடுக்கும் குரு ஆகியோரின் மூலமாக தெய்வத்தை பார்க்கலாம் என்பதற்காக தெய்வத்திற்கு முன் குருவை வைத்து இப்படி வரிசைப் படுத்தினார்கள். அப்பேற்பட்ட குருவை வணங்கும் விதமாக “குரு பூர்ணிமா” கொண்டாடப்படுகிறது. இப்படி குருவுக்கெல்லாம் குருவாக இருக்கும் வியாசர், தட்சிணா மூர்த்தி, முருகப் பெருமான் என குருக்களை வழிபடுவது வழக்கம். குரு பூர்ணிமா தினத்தில் நமக்கு பாடம் கற்றுக் கொடுத்த குருவை நாம் மனதார நினைத்தலும், கோயிலுக்கு சென்று வணங்குவதும் நல்லது. தற்போது நாம் கடைப்பிடித்துக் கொண்டிருக்கும் ஆசிரியர் தினம் போலவே, காலம் காலமாக குருவை நினைக்கும் வகையில், தான் கற்று வெளியேறிய பிறகும் தன்னுடைய குருவை நினைக்க வேண்டும் என்பதற்காக பின்பற்றப்பட்டு வந்த தினம் தான் குரு பூர்ணிமா என்பதால், இன்று குறைந்த பட்சம் நம் குருவை நினைக்கவாவது செய்யலாம். இந்நாளில் துறவிகள் மட்டுமில்லாமல், ஞான மற்றும் மோட்ச சாஸ்திரத்தை அறிய முற்படும் அனைவரும் தங்களது குருவையும், வியாச பகவானையும் ஆராதிக்க வேண்டும். வியாச பகவானை நிமித்தமாக வைத்து, ஆதிகுருவில் (சிவபெருமான் அல்லது ஸ்ரீமன் நாராயணன்) தொடங்கி, தங்களுடைய இப்பொழுதைய குரு வரை குரு பரம்பரையில் உள்ள அனைவரையும் இந்நாளில் வழிபட வேண்டும். வேதத்தை நான்காக வகுத்தவர் வியாசர். பகவான் கிருஷ்ணன் அருளிய கீதையைத் தொகுத்தவர் அவர்தான். பிரம்ம சூத்திரத்தை (வேதங்களின் சாரம்) எழுதியவர் வியாசர். இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த ப்ரஸ்தான த்ரயம் எனப்படும் மூன்று நூல்களிலுமே, வியாச முனிவரின் பங்குள்ளது. எனவே வியாச பகவானை முன்வைத்து, ஆனி மாதப் பவுர்ணமியன்று குரு பூர்ணிமா அனுசரிக்கப்படுகிறது.