பழநி திருஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேக பூஜைகள் துவக்கம்
பதிவு செய்த நாள்
05
டிச 2025 10:12
பழநி; பழநி திருஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேக பூஜைகள் துவங்கியது. பழநி முருகன் கோயில் கட்டுப்பாட்டின் கீழ் முருகனின் மூன்றாம் படை வீடான அடிவாரத்தில் குழந்தை வேலாயுதசுவாமி எழுந்தருளியுள்ள திருஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற முகூர்த்த கால் நடும் பணி நவ.5.,ல் நடந்தது. யாகசாலையில் யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. டிச.8 ல் திருஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதை முன்னிட்டு விமான கலசங்கள் டிச.1 ல் பொருத்தப்பட்டன. நேற்று (டிச.,4) அதிகாலை 5:00 மணிக்கு மங்கள இசை உடன் கணபதி ஹோமம், லட்சுமி பூஜை, கோ பூஜை, அஸ்வ பூஜை, கஜ பூஜை, சுமங்கலி பூஜை, பிரம்மச்சரிய பூஜை கன்னி பூஜை, நடைபெற்றது. மாலை 5:00 மணிக்கு இந்திர பூஜை, திசா பூஜை, வாஸ்து பூஜை நடைபெற்று வேள்வி வைக்கப்பட்ட கலச நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. இன்று (டிச.,5) அலங்கரிக்கப்பட்ட திருக்குடங்கள் வேள்விச் சாலையில் எழுந்தருள செய்தல் சூரிய பூஜை, சூரிய ஒளிக்கதிரில் இருந்து நெருப்பு எடுத்தல், திருமஞ்சனம் கொண்டு வருதல் நடைபெறும். மாலை 4:45க்கு நெல்லிமர வழிபாடு நடைபெறும். இரவு 7:00 மணிக்கு வேள்விச்சாலைக்கு திருக்குடங்கள் எழுந்தருளல், முதற்கால வேள்வி நடைபெறும். இரவு 9:00 மணிக்கு வேள்வி நிறைவு பெறும். டிச.,6 அன்று காலை 8:00 மணிக்கு இரண்டாம் கால வேள்வி துவங்கும்.காலை 10:45 மணிக்கு இரண்டாம் கால வேள்வி நிறைவுறும். மாலை 5:00 மணிக்கு மூன்றாம் கால வேள்வி துவங்கும். இரவு 8:30 மணிக்கு நிறைவடையும். டிச.,7. ல் காலை 9:00 மணிக்கு நான்காம் கால வேள்வி நடைபெறும். மாலை 6:00 மணிக்கு ஐந்தாம் கால வேள்வி நடைபெறும் கும்பாபிஷேக தினமான டிச.,8ஆம் தேதி அதிகாலை 4:00 மணிக்கு ஆறாம் கால வேள்வி நடைபெறும். காலை 6:30 மணிக்கு மூலவர் சன்னதி, திருச்சுற்றில் உள்ள சன்னதிகளுக்கு விமான கலசங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்று தீபாராதனை நடைபெறும். காலை 9:00 மணிக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறும். மாலை 6:00 மணிக்கு குழந்தை வேலாயுதசாமி திருவீதி உலா நடைபெறும். திரு ஆவினன்குடி குழந்தை வேலாயுதசாமி கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுவதை முன்னிட்டு குளத்து ரோடு, பஸ் ஸ்டாண்ட், திரு ஆவினன் குடி கோயில் மலைக்கோயில் பகுதிகளில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
|