பதிவு செய்த நாள்
06
ஜூலை
2023
04:07
கோபால்பட்டி, கோபால்பட்டி அருகே கோம்பைப்பட்டி முத்தாலம்மன் கோவில் திருவிழாவில் கழுகு மரம் ஏறும் நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி கடந்த ஜூன் 20 சாமி சாட்டுதல் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து தினமும் கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் பெண்கள் கும்மியடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. ஜூலை 3 கிராம தெய்வங்களுக்கு கே.அய்யாபட்டி, பெரிய கோம்பைப்பட்டி, பாப்பம்பட்டி, பெருமாள்கோவில்பட்டி, கடுகாபட்டி, சரளப்பட்டி, சின்ன கோம்பைபட்டி உள்ளிட்ட ஏழு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மேளதாளம் முழங்க பழம் வைத்து வழிபாடு செய்தனர். விழாவில் நேற்று முன்தினம் கே.அய்யாபட்டியிலிருந்து அம்மன் அலங்கார நகை பெட்டி அழைத்துச் சென்று அம்மன் அலங்காரம் நடந்தது. தொடர்ந்து அம்மன் கரகம் பாலித்து சப்பரத்தில் பவனி வந்து, கோவில் வந்தடைந்தது. நேற்று முளைப்பாரி, மாவிளக்கு, தீச்சட்டி, அலகு குத்துதல் மற்றும் பொங்கல் வைத்து கிடாய் வெட்டுதல் உள்ளிட்ட நேர்த்திக் கடன்களை பக்தர்கள் அம்மனுக்கு செலுத்தினர். தொடர்ந்து குட்டி கழுகு மரம் ஏறுதல், படுகளம் போடுதல் நிகழ்ச்சியை தொடர்ந்து மாலை கழுகு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. இதில் இளைஞர்கள் போட்டி போட்டு கழுகு மரத்தில் ஏறினர். இன்று மாலை மஞ்சள் நீராட்டம் மற்றும் அம்மன் கரகம் பூஞ்சோலை செல்லுதளுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவில் நத்தம் ஒன்றிய குழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன், மாவட்ட கவுன்சிலர் விஜயன், நத்தம் பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.