பதிவு செய்த நாள்
05
அக்
2012
10:10
ஆத்தூர்: ஆத்தூர் அருகே, மல்லியக்கரை கிராமத்தில், உலக நன்மை மற்றும் மழை வேண்டியும், திரவுபதி அம்மன் பூமிதி விழா, வெகுவிமரிசையாக நடந்தது. சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே மல்லியக்கரை கிராமத்தில், உலக நன்மை மற்றும் மழை வேண்டி, மகாபாரத சொற்பொழிவுகளுடன், திரவுபதி அம்மன் பூமிதி விழா நடத்த முடிவு செய்யப்பட்டது. கடந்த மாதம், 28ம் தேதி, திரவுபதி அம்மன், அர்ஜூனனுக்கு திருக்கல்யாணம் நடத்தப்பட்டு, திருத்தேரில் பவனி வரும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் (3ம் தேதி), மாலை, 3 மணியளவில், பக்கசூரன் முனிக்கு, பீமன் சாதம் கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று, திரவுபதி அம்மன் துகில் உரிதல், தபசு மரம் ஏறுதல் மற்றும் திரவுபதி அம்மன், தர்மர், அர்ஜுனன், பீமன் உள்ளிட்ட அலங்காரத்தில் வேடமிட்டு, வண்டி வேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, இன்று, காலை, 6 மணிக்கு, திரவுபதி அம்மன் உள்ளிட்ட ஸ்வாமிகள், தேரில் உலா செல்லுதல் நிகழ்ச்சியும், அர்ஜுனன் மாடு வளைத்தல், கோட்டை இடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை, 4.30 மணியளவில், திரவுபதி அம்மன் பூமிதிக்கும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.