பதிவு செய்த நாள்
20
ஜூலை
2023
06:07
அனுப்பர்பாளையம்: திருப்பூர் மாவட்டம், குன்னத்தூரில் புகழ்பெற்ற அருள்மிகு பொன் காளியம்மன் கோவில் உள்ளது.
கோவில், குண்டம் தேர் திருவிழா, கடந்த 5 ந் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. விழாவையொட்டி, இன்று 20ம் தேதி அதிகாலை குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக பாரியூர் அருள்மிகு கொண்டத்து காளியம்மனை அழைத்து வருதல், நிகழ்ச்சியை தொடர்ந்து, பக்தர்கள் குண்டம் இறங்கினர். இதில், ஐநூறுக்கு மேற்பட்டோர் பக்தர்கள் குண்டம் இறங்கி அம்மனை வழிபட்டனர். மதியம் 11 மணிக்கு ரதம் ஆரோகனம் நடைபெற்றது. ரதம் கோவிலில் இருந்து, புறப்பட்டு, கோபி ரோடு, பெருமாநல்லூர் ரோடு, மலையம்பாளையம் ரோடு வழியாக சென்று ஈஸ்வரன் கோவில் அருகில் நிறுத்தப்பட்டது. விழாவில், குன்னத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதியை சேர்ந்த இரண்டுயிரத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். நாளை 21ம் தேதி மாலை 5:00 மணிக்கு ஈஸ்வரன் கோவில் அருகில் நிறுத்தப்பட்ட ரதம் கோவில் நிலைக்கு இழுத்து செல்லப்படுகிறது. 22ம் தேதி இரவு அலங்கார முத்து பல்லக்கில் அம்மன் திருவீதி உலா வருதல், 23 ந் தேதி இரவு பஞ்ச மூர்த்திகள் வீதி உலா வருதல் 24 ந் தேதி காலை மஞ்சள் நீர் உற்சவம், இரவு சுவாமி நகைகளை வலையம் பாளையம் கொண்டு செல்லுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். குன்னத்தூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.