பழநி ரோப்கார் சேவை பாதிப்பு: மூன்றாவது வின்ச் செயல்படுத்த கோரிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜூலை 2023 06:07
பழநி: பழநி முருகன் கோயிலில் மூன்றாவது வின்சை செயல்படுத்த பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பழநி முருகன் கோயில் சென்று வர படிப்பாதை, யானை பாதை உள்ளது. மேலும் ரோப் கார், வின்ச் சேவைகள் உள்ளன. பழநி மலைக்கு செல்ல மூன்று வின்ச் பாதைகள் உள்ளது. தற்போது இரண்டு வின்ச்கள் செயல்பாட்டில் உள்ளன. மூன்றாவது வின்ச் பாதையில் புதிய வின்ச் பெட்டிகள் இணைக்கப்பட்டு செயல்படாமல் உள்ளது. அங்கு புதிய பெட்டிகளுக்கு தகுந்த பிளாட்பார்ம் அமைத்து, தகுந்த கருவிகள் பொருத்தி இயக்க திட்டமிடப்பட்டுள்ளது . தற்போது ஆடி மாதம் முதல் ரோப் கார் இயக்க வரையறுக்கப்பட்ட அளவைவிட காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். இதனால் பல மணி நேரங்கள் ரோப் கார் இயக்க முடியாத நிலை ஏற்படும். வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு நாட்களில் வெளிமாநில, வெளியூர், பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். அவர்கள் பெரும்பாலும் வின்ச், ரோப்கார் சேவையை பயன்படுத்த விரும்புகின்றனர். இந்நிலையில் பக்தர்கள் கூட்டம் நாடிச் செல்லும் அதிக காற்றின் வேகத்தால் ரோப் கார் சேவையை பயன்படுத்த இயலாமல் வின்ச் சேவையை நாடி செல்வர். ஆனால் இரண்டு வின்ச் மட்டும் செயல்படுவதால், பக்தர்கள் கூட்டம் வின்ச் டிக்கெட் வழங்கும் பகுதியில் அதிகரிக்கும். இதனால் பல மணி நேரம் காத்திருக்கும் சூழல் பக்தர்களுக்கு ஏற்படும். எனவே விரைவில் மூன்றாவது வின்ச் பணிகளை கோயில் நிர்வாகம் தீவிரப்படுத்தி விரைவில் பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
ரோப்கார் சேவை பாதிப்பு: இன்று (ஜூலை 20) பலத்த காற்றின் காரணமாக கோயில் செல்ல பயன்படும். ரோப்கார் சேவை மதியம் முதல் நிறுத்தப்பட்டது. இதனால் ரோப்கார் சேவையை பயன்படுத்த சென்ற பக்தர்கள் வரிசையில் இருந்து வெளியேறி வின்ச் ஸ்டேஷன் மற்றும் படிப்பாதை மூலம் மலைக்கோயில் சென்றனர். காற்றின் வேகம் அதிகம் உள்ள ஆடிமாதத்தில் ரோப்கார் வருடாந்திர பராமரிப்புகளை நிறைவு செய்தால் பக்தர்கள் அதிகமாக வரும் விஷேச மாதங்களில் பக்தர்கள் பயணிக்க பாதுகாப்பாக இருக்கும். இது குறித்து கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.