அரசாளவந்த அம்மன் கோயில் பால்குட விழா; ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25ஜூலை 2023 12:07
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அரசாள வந்த அம்மன் கோயில் பால்குட விழா ஜூலை 17ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அன்று முதல் தினமும் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வந்தன. விழாவின் தொடர்ச்சியாக இன்று காலை 10:35 மணிக்கு, ஆர்.எஸ்.மங்கலம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள திரௌபதி அம்மன் கோயிலில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று அரசாளவந்த அம்மன் கோயிலை அடைந்தனர். தொடர்ந்து பக்தர்கள் குடங்களில் கொண்டு வந்திருந்த பால் மூலம் மூலவர்கள் அரசாள வந்த அம்மன், துர்க்கை அம்மன் ஆகியோருக்கு பால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்கள் தீச்சட்டி எடுத்தும், அலகு குத்தியும், ஊர்வலமாக சென்று அம்மனுக்கு நேர்த்திக்கடன் நிறைவேற்றினர். மூலவர் அம்மனுக்கு நடைபெற்ற தீப ஆராதனையில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது. விழாவில் கோயில் நிர்வாகி ஆனந்த் உட்பட இந்து சமய மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.